கள்ளச்சாராயம் பலி எண்ணிக்கை 35 ஆக உயர்வு.. சிகிச்சையில் 90 பேர்.. டென்ஷன் ஆன தவெக தலைவர் விஜய்..!
Author: Vignesh20 June 2024, 10:20 am
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்த பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கள்ளக்குறிச்சி அருகே உள்ள கருணாபுரம் கிராமத்தில் சட்டத்திற்கு புறம்பாக கள்ள சாராய விற்பனை நடைபெற்று வந்துள்ளது. நேற்று முன்தினம் அங்கு சாராயம் குடித்த ஆறு பேர் வாந்தி மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், 4 பேர் மரணம் அடைந்தனர்.

அதனை தொடர்ந்து, மேலும் சாராயம் குடித்த நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால், அவர்கள் புதுச்சேரி ஜிப்மர் கள்ளக்குறிச்சி சேலம் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், நேற்று இரவு பலி எண்ணிக்கை 16 ஆக உயர்ந்திருந்தது. இந்நிலையில், தற்போது காலை நிலவரப்படி பலி எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது.
இதில், இரண்டு பெண்களும் அடங்குவர். மேலும், பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்ற அச்சம் எழுந்துள்ளது. உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில் பாதிக்கப்பட்டவர் குடும்பங்களுக்கு ஆறுதல் சொல்ல அடுத்தடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள அமைச்சர்களும் கள்ளக்குறிச்சிக்கு விரைந்துள்ளனர். முதல்வர் ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டவர்கள் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று பார்வையிட உள்ளனர் என தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த கள்ள சாராயம் தொடர்பான வழக்கு தற்போது, சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.
இதற்கிடையே, தவெக தலைவர் விஜய் இதுகுறித்து அறிக்கை வெளியிட்டு கண்டனத்தை தெரிவித்துள்ளார். அதில், கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில் கள்ளச் சாராயம் அருந்திய 25க்கும் மேற்பட்டோர் காலமான செய்தி, மிகுந்த அதிர்சியையும் மன வேதனையையும் அளிக்கிறது.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதோடு, உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் முழு உடல்நலம் பெற இறைவனைப் பிரார்த்திக்கின்றேன். கடந்த ஆண்டு இதே நிகழ்வு காரணமாகப் பல உயிர்களை இழந்த துயரத்தில் இருந்து இன்னும் முழுமையாக மீளாத நிலையில், மீண்டும் இப்படியொரு சம்பவம் நிகழ்ந்திருப்பது, அரசு நிர்வாகத்தின் அலட்சியத்தையே காட்டுகிறது. இது போன்ற சம்பவங்கள் நிகழாத வண்ணம், இனிமேலாவது தமிழக அரசு கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு தடுக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். என்று அவர் தெரிவித்துள்ளார்.