அன்ணனாகவும்.. அரணாகவும்.. திடீரென விஜய் கைப்பட கடிதம் எழுத காரணம் என்ன?
Author: Hariharasudhan30 December 2024, 9:51 am
ஆளும் ஆட்சியாளர்களை எத்தனை முறை கேட்டாலும் பயனில்லை என்பது தெரிந்ததே என தவெக தலைவர் விஜய் குறிப்பிட்டு உள்ளார்.
சென்னை: இது தொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், அக்கட்சியின் பெண் நிர்வாகிகளுக்கு எழுதிய கடிதத்தில், “கல்வி வளாகம் முதற்கொண்டு, ஒவ்வொரு நாளும் தமிழகத்தில் தாய்மார்கள், என்னருமைத் தங்கைகள், பெண் குழந்தைகள் என அனைத்துத் தரப்பு பெண்களுக்கும் எதிராக நடக்கும் சமூக அவலங்கள், சட்டம் ஒழுங்கு சீர்கேட்டு அவலங்கள், பாலியல் குற்றங்கள் என்று பல்வேறு வன்கொடுமைகளைக் கண்டு, உங்கள் அண்ணனாக மன அடுத்தத்திற்கும், சொல்லொணா வேதனைக்கும் ஆளாகிறேன்.
யாரிடம் உங்கள் பாதுகாப்பைக் கேட்பது? நம்மை ஆளும் ஆட்சியாளர்களை எத்தனை முறை கேட்டாலும் எந்தப் பயனுமில்லை என்பது தெரிந்ததே. அதற்காகவே இக்கடிதம். எல்லா சூழல்களிலும், நிச்சயமாக உங்களுடன் நான் உறுதியாக நிற்பேன், கல்வியில் கவனம் செலுத்துங்கள். பாதுகாப்பான தரிழகத்தைப் படைத்தே தீருவோம். அதற்கான உத்தரவாதத்தை நாம் அனைவரும் இணைந்தே விரைவில் சாத்தியப்படுத்துவோம்” எனக் கூறியுள்ளார்.
அதேநேரம், இக்கடிதம் விஜய் கைப்பட எழுதியுள்ளதால் அரசியல் முக்கியத்துவம் பெற்றுள்ளது. முன்னதாக, கடந்த டிசம்பர் 23ஆம் தேதி, சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்து வரும் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக, பல்கலை அருகில் பிரியாணி கடை நடத்தி வரும், சென்னை கோட்டூர்புரத்தைச் சேர்ந்த ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலில் உள்ளார்.
இதையும் படிங்க: தனது பெண் ஊழியரை பாலியல் இச்சைக்கு அழைத்த நாதக நிர்வாகி.. சிக்கிய முக்கிய ஆவணங்கள்!
மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக 3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட சிறப்பு விசாரணைக் குழு, உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இதற்கு முன்னதாகவே, ஆளும் திமுக அரசைக் கண்டித்து விஜய் அறிக்கை வெளியிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.