2,000 பேருக்கு பாஸ்.. ஆண்டு விழா, பொதுக்குழு.. தடபுடலாக தயாராகும் தவெக!

Author: Hariharasudhan
22 February 2025, 2:55 pm

தவெகவின் பொதுக்குழு மற்றும் ஆண்டு விழா, செங்கல்பட்டு அடுத்த பூஞ்சேரி கிராமத்தில் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சென்னை: சென்னை, ஈசிஆர் சாலையின், மாமல்லபுரம் அருகே உள்ள பூஞ்சேரி கிராமத்தில், வருகிற பிப்ரவரி 26ஆம் தேதி காலை 9 மணிக்கு, தமிழக வெற்றிக் கழகத்தின் முதலாம் ஆண்டு விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் கூட்டம் அதிகம் கூடும் என்பதால், முக்கிய நிர்வாகிகளுக்கு மட்டும் பாஸ் வழங்கப்பட உள்ளது.

இதற்காக, இன்று முதலே பாஸ் வழங்கப்பட இருப்பதாகவும், அதிலும் 2 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி வழங்க முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், செங்கல்பட்டு மாவட்டம், பூஞ்சேரி பகுதியில் உள்ள ஃபோர் பாயிண்ட் எனப்படும் தனியார் சொகுசு விடுதியில், தவெக பொதுக் குழுக் கூட்டம் மற்றும் ஆண்டு விழா கூட்டம் 26ஆம் தேதி நடத்தப்பட்ட உள்ளது.

இதனையடுத்து, அந்தப் பகுதியில் உள்ள சொகுசு விடுதியில், அதற்கான முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக, அக்கட்சியின் பொதுச் செயலர் புஸ்ஸி என்.ஆனந்த் நேரில் ஆய்வு செய்தார். அப்போது, தவெக தலைவர் விஜயின் பாதுகாப்பு குறித்தும் மற்றும் பாதுகாவலர்கள், தலைமை நிலையப் பொறுப்பாளர்கள், கட்சி நிர்வாகிகளுடனும் ஆலோசனை மேற்கொண்டார்.

TVK Vijay

மேலும், தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளில் இருந்து வரும் பொதுக்குழு உறுப்பினர்கள் சிரமமின்றி வந்து செல்வதற்கான ஏற்பாடுகள், அவர்களின் வாகனங்கள் நிறுத்துமிடம், கட்சித் தலைவர் வரும் பாதை மற்றும் திரும்பிச் செல்லும் பாதை தொடர்பாக ஆய்வு செய்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும், மாவட்டச் செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் அமர்வதற்கான இட வசதிகள் மற்றும் சுமார் 2,500 நபர்களுக்கு சைவ, அசைவ உணவுகள் வழங்குவதற்கான ஏற்பாடுகள் உள்ளிட்டவை குறித்தும் ஆய்வு செய்துள்ளனர். இருப்பினும், இன்னும் செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை தரப்பில் அனுமதி வழங்கப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: இது களையுதிர் காலம்.. எந்தக் கட்சியிலும் சேரவில்லையா? காளியம்மாள் களம் எப்படி?

முன்னதாக, நடிகர் விஜய், கடந்த 2024ஆம் ஆண்டு பிப்ரவ்ரி 2ஆம் தேதி கட்சிக்கான பெயரையும், கட்சிக் கொடியையும் வெளியிட்டார். தொடர்ந்து, கடந்த அக்டோபரில் தவெக முதல் மாநில மாநாட்டை, விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த வி.சாலை கிராமத்தில் பிரம்மாண்டமாக நடத்தி, தமிழக அரசியலில் கவனம் பெற்றார்.

குறிப்பாக, 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிட உள்ளது. மேலும், இதுவரை விஜய் பொதுவெளியில் பேசியது கட்சி மாநாடு, அம்பேத்கர் புத்தக வெளியீடு, பரந்தூர் திட்டத்தால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்தது ஆகியவை மட்டுமே. இதனிடையே, நிர்வாகிகள் நியமனத்தில் தவெக மும்முரமாக செயல்பட்டு வருகிறது.

  • my scenes were deleted in goat movie said by black padi சண்ட போட்டு படத்துல நடிச்சேன்; ஒரு பயனும் இல்ல- வேதனையில் GOAT பட நடிகர்… அடப்பாவமே!