அதிமுகவை முந்தும் தவெக.. கூட்டணி கட்டாயத்தில் இரட்டை இலை? பரபரப்பு சர்வே!
Author: Hariharasudhan29 March 2025, 5:10 pm
சி வோட்டர் நடத்திய கருத்துக்கணிப்பில் விஜய், 18 சதவீத வாக்குகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது தமிழக அரசியலில் கவனம் பெற்றுள்ளது.
சென்னை: முதலமைச்சர் பதவிக்கு மு.க.ஸ்டாலின் மீண்டும் மிகவும் விரும்பப்படும் தேர்வாக உள்ளார் என சி வோட்டர் நடத்திய கருத்துக்கணிப்பில் 27 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். அதேநேரம், இந்த கருத்துக்கணிப்பில், யாரும் சற்றும் எதிர்பார்க்காத நேரத்தில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், 18 சதவீத வாக்குகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது அரசியல் கவனத்தைப் பெற்றுள்ளது.
தொடர்ந்து, அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி 10 சதவீத ஆதரவுடன் மூன்றாவது இடத்தையும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை 9 சதவீத ஆதரவையும் பெற்று நான்காவது இடத்தை பெற்றுள்ளார். ஆனால், அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி, பாஜக அண்ணாமலை ஆகியோரை பின்னுக்குத்தள்ளி விஜய் இரண்டாம் இடத்தில் இருப்பது பெரும் கவனத்தை பெற்றுள்ளது.
ஏனென்றால், அரசியல் களத்தில், குறிப்பாக தேர்தல் களத்தில் விஜயின் தவெக இன்னும் நேரடியாக இறங்காத சூழ்நிலையில் இந்த முடிவுகள் வெளியாகியுள்ளது. இருப்பினும், மேலும் சில ஆய்வு முடிகளையும் நாம் கவனிக்க வேண்டியுள்ளது.

இந்த ஆய்வு முடிவுகளின்படி, 15 சதவீதம் பேர் தற்போது உள்ள திமுக தலைமையிலான தமிழக அரசின் செயல்பாட்டில் ‘மிகவும் திருப்தி அடைவதாக’ கூறியுள்ளனர். அதேநேரம், 36 சதவீதம் பேர் ‘ஓரளவுக்கு திருப்தி அடைவதாகவும்’, 25 சதவீதம் பேர் ’எந்த விதத்திலும் திருப்தி அடையவில்லை’ என்றும், 24 சதவீதம் பேர் தங்களுக்கு கருத்துக்கணிப்பு தொடர்பாக எந்தக் கருத்துக்களும் கூறாமல் இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.
அதேபோல், பிரதான எதிர்கட்சித் தலைவராக உள்ள எடப்பாடி பழனிசாமியின் செயல்பாட்டில் 8 சதவீதம் பேர் மட்டுமே மிகவும் திருப்தி அடைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. மேலும், 27 சதவீதம் பேர் ஓரளவுக்கு திருப்தி அடைந்துள்ளதாகவும், 32 சதவீதம் பேர் எடப்பாடி பழனிசாமியின் செயல்பாடு எந்த விதத்திலும் திருப்தி அளிக்கவில்லை என்றும் கூறியிருக்கின்றனர்.
இதையும் படிங்க: விரைவில் இபிஎஸ் – அண்ணாமலை சந்திப்பு.. மத்தியில் ஒலித்த குரல்.. பரபரக்கும் அரசியல் களம்!
மிக முக்கியமாக, பதிலளித்தவர்களில் பெண்களின் பாதுகாப்பை 15 ச்தவீதம் பேர் முக்கிய கவலையாகக் குறிப்பிட்டுள்ளனர். அதேநேரம், 2026 தேர்தல் களம் என்பது பெண்கள் பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு ஆகியவற்றை முன்னிறுத்தி திமுக கூட்டணி தவிர்த்த அனைத்து கட்சிகளும் சந்திக்கும் எனவும் அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
முன்னதாக, தவெக பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் விஜய், 2026 தேர்தலில் திமுக மற்றும் தவெகவிற்குத்தான் போட்டி என பேசினார். இதற்கு திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் எதிர் கருத்துகள் கூறிய நிலையில், இந்த கருத்துக்கணிப்பு கவனம் பெற்றுள்ளது.
அதேநேரம், டெல்லிக்கு சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்தித்து வந்த இபிஎஸ், சந்தர்ப்ப சூழலுக்கு ஏற்ப கூட்டணி அமைக்கப்படும் எனக் கூறியதும், அதனைத் தொடர்ந்து அண்ணாமலை டெல்லி சென்றதும், மீண்டும் அதிமுக உடன் பாஜக கூட்டணி அமைக்கும் என்று பேசப்பட்டது.
ஆனால், இந்தக் கருத்துக்கணிப்பின்படி, அடுத்தடுத்த புள்ளிகளில் உள்ள அதிமுகவும், பாஜகவும் கூட்டணி அமைத்தால் மீண்டும் பிரதான அந்தஸ்தைப் பெறலாம் என்ற நிலையில் உள்ளதாகவும் அரசியல் நோக்கர்கள் கூறுவதும் குறிப்பிடத்தக்கது. எனவே, 2026 தேர்தல் களம் பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.