தவெக நிர்வாகிகள் நியமனத்தில் சிக்கல்? கூடுதலாகிறதா கட்சி மாவட்டங்கள்?
Author: Hariharasudhan13 March 2025, 1:30 pm
தவெக அடுத்தகட்ட மாவட்டச் செயலாளர்கள் இன்று நியமனம் செய்யப்படுவதாக கூறப்படும் நிலையில், அதில் சில சிக்கல்கள் எழுந்துள்ளதாகத் தெரிகிறது.
சென்னை: விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் 6ம் கட்ட மாவட்டச் செயலாளர்களின் பட்டியல் இன்று வெளியாகவுள்ளது. இதன்படி, இன்று 25 மாவட்டச் செயலாளர்கள் நியமிக்கப்பட வேண்டிய சூழலில், இன்றும் 19 மாவட்டச் செயலாளர்களின் பட்டியலே வெளியாகும் எனக் கூறப்படுகிறது.
மேலும், மீதம் உள்ள 6 மாவட்டச் செயலாளர்களை நியமிப்பதில் பல்வேறு சிக்கல்கள் எழுந்துள்ளன. ஜனவரி மாத இறுதியில் தொடர்ச்சியாக ஒரு வாரம் நிர்வாகிகளைச் சந்தித்த தவெக தலைவர் விஜய், நிர்வாக வசதிக்காக 120 கட்சி மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார்.
இதன்படி, ஒவ்வொரு நாளும் 19 மாவட்டச் செயலாளர்களை நியமனம் செய்தும் விஜய் அறிவிப்பை வெளியிட்டார். மேலும், சமீபத்தில் நடந்து முடிந்த நிர்வாகிகள் நியமனம் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில், தவெக மொத்தமாக 95 மாவட்டச் செயலாளர்கள் நியமனம் செய்யப்பட்டனர்.

இதன்பின் தவெக இரண்டாம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில், விரைவில் பூத் கமிட்டி மாநாடு நடத்தப்படும் என விஜய் அறிவித்தார். இதனை ஜூலை மாதத்தில் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது.
இதையும் படிங்க: உண்மையை சொன்னா நாறிடும்.. எச்சரித்த ஐஸ்வர்யா : பதிலடி கொடுத்த தனுஷ்..!!
இந்த நிலையில், ஒரே தொகுதிகளில் சீனியர்கள் பலரும் இருப்பதால், மாவட்டச் செயலாளர்கள் நியமனத்தில் இழுபறி நீடித்து வருகிறது. இதனால் நிர்வாகிகள் நியமனத்திற்குப் பின் மாவட்டச் செயலாளர்கள் அதிகரிக்கப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுதொடர்பாக ஏற்கனவே தவெக தலைவர் விஜய்க்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் கோரிக்கை வைத்துள்ளதாக கூறப்படும் நிலையில், மற்ற கட்சிகளில் இருந்து வந்தவர்கள், விஜய் மக்கள் இயக்கத்தில் பணியாற்றியவர்கள், பண வசதி கொண்டவர்கள் என்று பலரும் போட்டியில் இருப்பதால், 6 மாவட்டங்களில் மாவட்டச் செயலாளர்கள் நியமிக்க முடியாமல் தவெக திணறி வருவதாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.