என்ன இது விஜய்க்கு வந்த சோதனை? ஒரே நொடியில் திமுகவில் இணைந்த தவெகவினர்!
Author: Hariharasudhan11 December 2024, 11:57 am
சென்னை தண்டையார்பேட்டையில் கொடி வைக்கச் சென்ற தவெகவினர், திடீரென திமுகவில் இணைந்ததால் பரபரப்பு நிலவுகிறது.
சென்னை: சென்னை தண்டையார்பேட்டையில், தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை நட்டு வைப்பதற்கு, தவெகவைச் சேர்ந்த சில இளைஞர்கள் அங்கு வந்தனர். அதற்கான பெயர்ப் பலகையை அவர்கள் அங்கு வைத்துக் கொண்டு இருந்தனர். அப்போது திடீரென போலீசார் வந்ததால் பதற்றம் நிலவியது.
இதனையடுத்து, இங்கு அனுமதி இன்று கொடி, பெயர்ப்பலகை ஆகியவற்றை வைக்கக்கூடாது என போலீசார் கூறி உள்ளனர். அது மட்டுமல்லாது, அங்கு வந்த திமுக இளைஞரணி நிர்வாகிகளும், அனுமதி இல்லாமல் இவ்வாறு கட்சி பேனர், கொடி, பெயர்ப்பலகை ஆகியவற்றை வைக்கக்கூடாது எனக் கூறி உள்ளனர்.
பின்னர், அவர்கள் என்ன நினைத்தார்களோ, திடீரென பெயர்ப்பலகை எல்லாவற்றையும் தவெகவினரே அகற்றி கொண்டு சென்றனர். பின்னர் அடுத்த சில நிமிடங்களில், தவெக கொடி, பெயர்ப்பலகை வைக்க வந்த நபர்கள், திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். இது தற்போது பேசுபொருளாகி உள்ளது.
முன்னதாக, கடந்த அக்டோபர் 27ஆம் தேதி, தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு, விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலை என்னும் கிராமத்தில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவரும், நடிகருமான விஜய் கலந்து கொண்டு கட்சியின் கொள்கைகள், கோட்பாடுகள், செயல்திட்டங்கள் ஆகியவற்றை அறிவித்தார்.
இதையும் படிங்க: VPN மூலம் மிகப்பெரிய நெட்வொர்க்.. பாங்காங்கில் இருந்து போதைப்பொருள் வந்தது எப்படி? மேலும் இருவர் கைது!
அதில், எதைச் செய்தாலும் சட்டப்பூர்வமாக, அதற்கான முறையான அனுமதியோடு நிர்வாகிகள் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். இந்த நிலையில், கொடி, பெயர்ப்பலகை வைக்கச் சென்ற தவெகவினருக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், உடனடியாக அவர்கள் திமுகவில் இணைந்தது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.