ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு ஆள் சேர்க்கும் விவகாரத்தில் ட்விஸ்ட்.. 4 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்!
Author: Udayachandran RadhaKrishnan7 August 2024, 12:09 pm
ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புக்கு ஆட்களை திரட்டிய வழக்கில் 4 பேர் மீது என்.ஐ.ஏ. அதிகாரிகள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.
கோவை – உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு கடந்த 2022 – ம் ஆண்டு அக்டோபர் மாதம் 23 – ந் தேதி கார் வெடிப்பு சம்பவம் நடந்தது. இதில் காரை ஓட்டி வந்த உக்கடத்தை சேர்ந்த ஜமேஷா முபின் (வயது 28) என்பவர் உயிரிழந்தார்.
இதுதொடர்பாக தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த வழக்கில் தற்போது வரை 14 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இதன் தொடர்ச்சியாக கோவை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தொடர் சோதனை நடத்தினர். அதில் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புக்கு ஆட்களை திரட்ட மூளைச்சலவை செய்தது உள்ளிட்டவை தொடர்பான வாசகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
இது தொடர்பாக சென்னையில் உள்ள என்.ஐ.ஏ. அதிகாரிகள் தனியாக வழக்குப் பதிவு செய்தனர். இதுதொடர்பாக ஜமீல் பாஷா, முகமது உசேன், இர்ஷாத், சையது அப்துல் ரகுமான் ஆகியோரை கடந்த சில மாதங்களுக்கு முன்பு கைது செய்தனர்.
அவர்களை என்.ஐ.ஏ. அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரித்தனர். அவர்கள் 4 பேர் மீதும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சென்னை பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.