அதிமுக முன்னாள் கவுன்சிலர் கொலையில் ட்விஸ்ட்… உறவினர்கள் மறியல் : போலீசார் விசாரணையில் பரபர!
Author: Udayachandran RadhaKrishnan30 June 2024, 11:16 am
கடலூர் முதுநகர் அருகே உள்ள வண்டிபாளையம் ஆலை காலனியை சேர்ந்தவர் தேவராஜ் மகன் புஷ்பநாதன் (45).முன்னாள் கவுன்சிலரான இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவருக்கு மஞ்சுளா என்ற மனைவியும், இரண்டு மகள்களும் உள்ளனர். இந்நிலையில் புஷ்பநாதன் நேற்று இரவு தனது மோட்டார் சைக்கிளில் புது வண்டி பாளையம் சூரசம்ஹாரத் தெருவில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது சிலர் மோட்டார் சைக்கிளில் அவரை பின்தொடர்ந்து வந்துள்ளனர். மேலும் அவர்கள் திடீரென முன்னோக்கி வந்து புஷ்பநாதன் சென்ற மோட்டார் சைக்கிளை வழிமறித்துள்ளனர். மேலும் அவர்கள் கையில் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை வைத்திருந்ததால் பதறிப்போன புஷ்பநாதன், மோட்டார் சைக்கிளை போட்டு விட்டு அங்கிருந்து தப்பி ஓடினார்.
இதை பார்த்த மர்ம நபர்கள் அவரை விரட்டி சென்று கத்தியால் முகத்தில் பலமுறை வெட்டி உள்ளனர். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த புஷ்பநாதன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதைப் பார்த்த அந்தப் பகுதியில் சென்று கொண்டிருந்த பொதுமக்கள் பதறி அடித்துக் கொண்டு ஓடினர். இதன் பின்னர் மர்ம நபர்கள் அங்கிருந்து தங்களது மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த கடலூர் முதுநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து புஷ்பநாதனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து புஷ்பநாதனின் உறவினர்கள் கடலூர் அரசு மருத்துவமனைய முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த கடலூர் டிஎஸ்பி பிரபு மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உறவினர்கள் கூறும் போது புஷ்பநாதனை கொலை செய்தவர்கள் உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இதை கேட்ட போலீசார் விரைவில் நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று உறுதி அளித்தனர். இதை ஏற்ற புஷ்பநாதனின் உறவினர்கள் சாலை மறியலில் கைவிட்டு சென்றனர் மேலும் புஷ்பநாதனின் உடல் பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
முன்னாள் கவுன்சிலரான புஷ்பநாதன் தற்போது ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். அந்த தொழில் போட்டி காரணமாக அவரை யாரேனும் கொலை செய்தார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு வண்டி பாளையம் ஆலை காலனி பகுதியில் புஷ்பநாதன் தரப்புக்கும் அந்த தெருவில் உள்ள சில சிலருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சனையில் இரு தரப்பினரும் மோதிக் கொண்டதாக தெரிகிறது. இதனால் அந்த முன் விரோதத்தை மனதில் வைத்துக் கொண்டு அவரை கொலை செய்தார்களா? என்ற கோணத்திலும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் அதிமுகவை சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் ஒருவரையும், தற்போது கடலூர் மாநகராட்சி அதிமுக கவுன்சிலராக உள்ள ஒருவரையும் மேலும் வண்டி பாளையம் பகுதியை சேர்ந்த ஒருவர் என மூன்று பேரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் உட்கட்சி பூசல் காரணமாக இந்த கொலை சம்பவம் நடந்ததா என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.