அமைதியான சாந்தி இல்ல அடாவடியான சாந்தி.. நள்ளிரவில் காருக்குள் காத்திருந்த ட்விஸ்ட் : அதிர்ச்சியில் ஓட்டுநர்..!!
Author: Udayachandran RadhaKrishnan4 July 2022, 1:56 pm
நள்ளிரவில் தனியாக பரிதவித்த பெண்ணுக்கு லிப்ட் கொடுத்த கார் ஓட்டுநருக்கு காத்திருந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
சென்னை புறநகர் பகுதிகளில் நாளுக்கு நாள் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட புறநகர் பகுதிகளான நந்தம்பாக்கம், பரங்கிமலை, ஆதம்பாக்கம், பழவந்தாங்கல், மடிப்பாக்கம் போன்ற பகுதிகளில் குற்றச் சம்பவங்களை தடுப்பதற்காக, பொதுமக்களின் பங்களிப்போடு முக்கிய சந்திப்பு பகுதிகளில் காவல் உதவி மையங்கள் அமைக்கப்பட்டன.
குறிப்பாக ஆதம்பாக்கம் தில்லை கங்கா நகரிலும் காவல் உதவிமையம திறக்கப்பட்டது. போலீசார் அந்த மையங்களில் காவலுக்கு இருந்த போது குற்றச் சம்பவங்கள் நிகழவில்லை. தற்போது அந்த மையம் பூட்டியே கிடப்பது, குற்றச் சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு வசதியாகவே உள்ளது.
இதனால் சில மாதங்களாக வழிப்பறி, செயின் பறிப்பு, திருட்டு, போதைப் பொருள் விற்பனை என குற்றச் செயல்களும் அதிகரித்துவிட்டன. இதனால் இந்த காவல் உதவி மையத்தை உடனே திறக்க வேண்டும் என ஆலந்தூர் மக்கள் சென்னை போலீசுக்கு முக்கிய கோரிக்கை விடுத்திருந்தனர்.
அதற்கு முக்கிய காரணம், மதுரவாயல் பைபாஸ் பகுதியில் வழிப்பறி சம்பவங்கள் அதிகரிக்க துவங்கியுள்ளதுதான். மதுரவாயல் – தாம்பரம் பைபாஸ் சாலையில் வானகரம் டோல்கேட் அருகே பெண் ஒருவர் நள்ளிரவு 1 மணிக்கு நின்று கொண்டிருந்தார்.. அப்போது அந்த வழியாக ஒரு கார் வந்துள்ளது.. அந்த காரை கைகாட்டி மறித்து நிற்க செய்து உதவி கேட்டார் அந்த பெண்.. தனியாக ஒரு பெண் நிற்பதை பார்த்ததும், உதவி செய்யும் நோக்கில் அந்த டிரைவரும் காரை நிறுத்தினார்.
உடனே காருக்குள் ஏறி அமர்ந்துள்ளார் அந்த பெண். கார் ஸ்டார்ட் செய்வதற்குள் திபுதிபு வென 4 பேர் கொண்ட கும்பல் காருக்குள் ஏறி, ஓட்டுநரின் கழுத்தில் கத்தியை வைத்து பணம் கேட்டு மிரட்டினர். உடனே ஓட்டுநரிடம் 2 ஆயிரம் ரூபாயை மிரட்டி பறித்தனர்.
இதை கண்ட அந்த வழியாக வந்த சக ஓட்டுநர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக ரோந்து காவல்துறையினருக்கு தகவல் சொல்ல, அவர்கள் விரைந்து வந்தனர். ஆனால் சைரன் சத்தத்தை கேட்டதும், அந்த கும்பல் அங்கிருந்த தப்பியது. ஆனால் காருக்குள் அந்த பெண் மட்டும் சிக்கிக் கொண்டார்
பெண்ணிடம் நடத்தி விசாரணையில், அவர் கோயம்பேடு பகுதியை சேர்ந்த சாந்தி என்பதும், நள்ளிரவில் பைபாஸ் சாலையில் இப்படி வழிப்பறி செய்வது வழக்கம் என்றும், அதிலும் குறிப்பாக தனியாக கார் ஓட்டி வருபவர்கள்தான் சாந்தி வைக்கும் முதல் குறி என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து தப்பி சென்ற 4 பேர் யார் என்பது குறித்து சாந்தியை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். பைபாஸ் சாலையில் தனியார் செல்லும் கார் ஓட்டுநர்கள், பாவப்பட்டு பரிதாப்பட்டு சாலையோரம் லிஃப்ட் கொடுத்தால் எந்த மாதிரியான சம்பவமும் நிகழும் என்பதற்கு இந்த சம்பவமே சாட்சியாக அமைந்துள்ளது.