பார்ட்டியில் ஏறிய போதை.. தெளிந்ததும் தெரிந்த அவலம்.. அரசுப் பேருந்து ஓட்டுநர் சிக்கியது எப்படி?
Author: Hariharasudhan31 January 2025, 3:57 pm
நெல்லையில், இளம்பெண்ணை போதையில் ஆழ்த்தி நண்பருடன் சேர்ந்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி: நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுபாஷ் (37). இவருக்கு திருமணமான நிலையில், இரண்டு குழந்தைகள் உள்ளனர். சுபாஷ், ரயில்வேயில் பணியாற்றி வருகிறார். இதனிடையே, புதுச்சேரியைச் சேர்ந்த 29 வயது இளம்பெண்ணுடன் சுபாஷுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
அப்பெண், கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பார்மசிஸ்டாக வேலை பார்த்து வந்துள்ளார். இதனிடையே, தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெறும் பிரசங்கத்தில் பங்கேற்பதை அப்பெண் வழக்கமாக வைத்துள்ளதால், இதற்காக ரயிலில் வந்து செல்லும்போது சுபாஷுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
பின்னர், இருவரும் தங்களது செல்போன் எண்ணைப் பகிர்ந்து கொண்டு பேசி பழகி வந்துள்ளனர். இந்த நிலையில் சுபாஷ், தனது குடும்பத்தினரை வெளியூருக்கு அனுப்பிவிட்டு, பார்ட்டி வைப்பதாகக் கூறி இளம்பெண்ணை நெல்லைக்கு அழைத்துள்ளார்.

இதன்படி நெல்லை வந்த அந்தப் பெண்ணுடன், தனியார் பாரில் மது குடித்துள்ளனர். அப்போது, அந்தப் பெண்ணுக்கு போதை தலைக்கேறியதால், சுபாஷ் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று, அங்கு வைத்து அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர், அவரது நண்பரான அரசுப் பேருந்து ஓட்டுநர் முருகேசன் (37) என்பவரையும் அழைத்து அந்தப் பெண்ணுடன் இருவரும் தனிமையில் இருந்துள்ளனர்.
இதையும் படிங்க: புகாரளிக்கச் சென்ற பெண்.. எஸ்ஐ சொன்ன ‘அந்த’ வார்த்தை.. மதுரையில் நடந்தது என்ன?
இதனையடுத்து, போதை தெளிந்த அப்பெண், தனக்கு நேர்ந்ததை சுதாகரித்துக் கொண்டு, அங்கிருந்து தப்பி, உறவினர்கள் மூலம் போலீசில் புகார் அளித்துள்ளார். ஆனால், அவர் புதுச்சேரியைச் சேர்ந்தவர் என்பதால் சம்பவ இடத்தை அவரால் சரியாக குறிப்பிட்டுச் சொல்ல முடியவில்லை.
இருப்பினும், வழியில் இருந்த ஒரு போர்டில் இடம் பெற்றிருந்த பெயரை போலீசில் குறிப்பிட்டுள்ளார். இதன் பேரில், சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், விசாரணைக்குப் பிறகு சுபாஷ் மற்றும் அவரது நண்பர் முருகேசனை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.