மனைவிக்கு அறிமுகமான நபர்.. கணவரும் சேர்ந்து செய்த செயல்.. சென்னையில் பரபரப்பு சம்பவம்!
Author: Hariharasudhan31 March 2025, 7:57 pm
சென்னையில், ஐடி தம்பதியிடம் முதலீடு செய்வதாக ஏமாற்றி ரூ.65 லட்சம் அளவில் மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை: சென்னை மாவட்டம், கொளத்தூர் அடுத்த சம்தரியா காலனியைச் சேர்ந்தவர்கள் பாலாஜி – ஜமுனா (28) தம்பதி. இவர்கள் இருவரும் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில், கடந்த 2023ஆம் ஆண்டு வண்டலூரைச் சேர்ந்த ஹரிஷ் (29) என்பவர் ஜமுனாவுக்கு அறிமுகமாகியுள்ளார்.
இந்த பழக்கத்தின் மூலம் ஒருநாள், ஜமுனா மற்றும் அவரது கணவரை தொடர்பு கொண்ட ஹரிஷ், தனது நண்பரான சூளைமேட்டைச் சேர்ந்த சதீஷ் (32) என்பவர், துரைப்பாக்கம் பகுதியில் தனியார் மென்பொருள் நிறுவனம் நடத்தி வருகிறார். எனக் கூறியுள்ளார்.
எனவே, அவரது நிறுவனத்தில் முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் வாங்கித் தருவதாக கூறியுள்ளார். ஆனால், தங்களிடம் பணம் எதுவும் இல்லை என ஐடி தம்பதி கூறியுள்ளனர். ஆனால், ஹரிஷ் அவரது நண்பர் சதீஷ் மூலம் வங்கியில் கடன் ஏற்பாடு செய்து தருவதாகவும், மாதத் தவணைகளை நிறுவனத்திலிருந்து செலுத்திவிடுவதாகவும் கூறியுள்ளார்.
இதற்கு ஜமுனா ஒப்புக் கொண்டதை அடுத்து, அவரது பெயரில் பல வங்கிகளில் 65 லட்சத்து 56 ஆயிரத்துக்கு கடன் பெற்று, நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர். ஆனால், பேசிய படி மாதத் தவணைகளை சரியாகச் செலுத்தாமல், சதிஷ் மற்றும் ஹரிஷ் ஆகிய இருவரும் சேர்ந்து ஏமாற்றி வந்துள்ளனர். ஒருமுறை, இது குறித்து கேட்ட ஜமுனாவிற்கு அவர்கள் கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: 2 மாதங்களாக கோவை சிறையில் விலகாத மர்மம்.. போலீசாரின் முக்கிய நகர்வின் பின்னணி!
இதனால் அதிர்ச்சி அடைந்த ஜமுனா, இது தொடர்பாக ஒட்டேரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதன்படி வழக்குப் பதிவு செய்த போலீசார், ஹரிஷ் மற்றும் சதீஷ் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.