இலங்கைக்கு கடத்தப்படும் மெத்தபெட்டமைன்.. சென்னையில் இருவர் சிக்கியது எப்படி?
Author: Hariharasudhan29 October 2024, 7:48 pm
சென்னையில் மெத்தபெட்டமைன் வைத்திருந்த இருவரை கைது செய்துள்ள போலீசார், அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை: சென்னை மூலக்கடை பேருந்து நிலையம் அருகே மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் திடீரென கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு சந்தேகத்திற்கிடமான வகையில் 2 பேர் நின்று கொண்டிருந்துள்ளனர். எனவே, அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது, அவர்களிடம் போதைப் பொருள் இருந்தது தெரிய வந்து உள்ளது.
இதனையடுத்து, மேலும் விசாரணை மேற்கொண்டபோது, அதில் ஒருவர் குமரி மாவட்டம் இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வரும் இலங்கையைச் சேர்ந்த விஜயகுமார் என்பதும், மற்றொருவர் சென்னையைச் சேர்ந்த மணிவண்ணன் என்பதும் தெரிய வந்துள்ளது. இதன்படி, மணிவண்ணன் அளித்த தகவலின் அடிப்படையில், அவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்டு உள்ளது.
அப்போது, 900 கிராம் அளவிலான மெத்தபெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், இருவரிடமும் சேர்ந்து 2.700 கிராம் மெத்தபெட்டமைன் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. மேலும், இதன் சந்தை மதிப்பு 27 கோடி ரூபாய் ஆகும். அதேநேரம், அவர்களிடம் இருந்து 15 லட்சம் ரூபாய் ரொக்கப் பணத்தையும் பறிமுதல் செய்த போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர், இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இதையும் படிங்க : சென்னைவாசிகளே.. பட்டாசு வெடிக்க என்னென்ன நிபந்தனைகள் தெரியுமா?