வடமாநிலத்தில் இருந்து ரயில்கள் மூலம் கோவைக்கு கஞ்சா கடத்தல்: 2 பேர் கைது…70 கிலோ கஞ்சா பறிமுதல்..!!
Author: Rajesh15 March 2022, 11:22 am
கோவை: வட மாநிலங்களில் இருந்து ரயில்கள் மூலம் கஞ்சா கடத்தி வந்து விற்பனையில் ஈடுபட்ட ஒடிசாவை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து 70 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம், சூலூர் அடுத்த செலக்கரிசல் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் பணிபுரிந்து வரும் வடமாநில இளைஞர்களுக்கு புதர்களில் மறைத்து வைத்து கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக சுல்தான்பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின்பேரில் காவல் ஆய்வாளர் மாதையன் மற்றும் உதவி ஆய்வாளர் குப்புராஜ் தலைமையிலான சுல்தான்பேட்டை போலீசார், செலக்கரிசல் குளம் அருகே தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் இருந்த நபரை பிடித்து சோதனையிட்டனர்.
அப்போது அவரது கைப்பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கஞ்சா பொட்டலங்களை கைப்பற்றிய போலீசார், அவரை சுல்தான்பேட்டை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது ஒரிசா மாநிலத்தை சேர்ந்த சிபாராம் மஹாராணா தனது கூட்டாளியான சுதர்சன் புஹான் என்பருடன் இணைந்து வடமாநிலங்களில் இருந்து ரயில்கள் மூலம் கஞ்சா கடத்தி வந்ததும், செலக்கரிச்சல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள காட்டுப்பகுதியில் புதர்களில் கஞ்சா பொட்டலங்களை பதுக்கி வைத்து வடமாநில இளைஞர்களுக்கு விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த 70 கிலோ கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.
0
0