சாலையில் பைக்கில் சென்ற சகோதரிகள்… காரில் இருந்து இறங்கிச் சென்று தாக்கிய தம்பதி ; கண்ணீர் மல்க போலீஸில் புகார்..!
Author: Babu Lakshmanan8 August 2023, 6:33 pm
தூத்துக்குடியில் காருக்கு வழிவிடாமல் இருசக்கர வாகனத்தில் சென்ற சகோதரிகளை பாதியில் நிறுத்தி கொடூரமாக தாக்கி செல்போனை உடைத்து வண்டி சாவியை பிடுங்கி சென்ற கணவன், மனைவி மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி தாளமுத்து நகர் பகுதியை சேர்ந்தவர் கனகராஜ். இவரது மனைவி கேசகி உடல் நலக்குறைவு காரணமாக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கனகராஜின் மகள்களான சந்தான செல்வி மற்றும் வினோஜா ஆகிய இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது தாயை பார்த்துவிட்டு, இருசக்கர வாகனத்தில் தாளமுத்து நகரில் உள்ள தங்களது வீட்டுக்கு திரும்பி கொண்டு இருந்தனர்.
அப்போது, தூத்துக்குடி ராஜாஜி பூங்கா அருகே இவர்களது பின்னால் வந்த காரில் ஓட்டுநர் பயங்கரமாக சப்தம் எழுப்பி வழிவிட கூறியுள்ளனர். அப்போது, சாலையில் போக்குவரத்து அதிகமாக இருந்ததால் இருசக்கர வாகனத்தில் சென்ற சந்தானசெல்வியும், வினோஜாவும் மெதுவாக சென்றுள்ளனர்.
இதைத் தொடர்ந்து, காரில் பின் தொடர்ந்து வந்தவர்கள் இருசக்கர வாகனத்தில் சென்ற இரண்டு சகோதரிகளையும் அநாகரிகமான வார்த்தைகளில் திட்டி உள்ளனர். மேலும், பழைய பேருந்து நிலையம் அருகே அவர்களது இருசக்கர வாகனத்தை நிறுத்தி, காரில் இருந்து கீழே இறங்கிய கணவன், மனைவி மற்றும் ஒருவர் ஆகியோர் சகோதரிகளில் ஒருவரான வினோஜாவையும், சந்தன செல்வியையும் கடுமையாக தாக்கியுள்ளனர்.
மேலும் தாக்கியதை வீடியோ எடுத்த செல்போனையும் கீழே போட்டு உடைத்துள்ளனர். அப்போது, நாங்கள் போலீஸ்காரர் வக்கீல் நீங்கள் யாரிடம் போய் வேண்டுமானாலும், கூறுங்கள் என்று சொல்லிவிட்டு இருசக்கர வாகனத்தின் சாவியும் எடுத்து சென்று விட்டனர் .
தொடர்ந்து காயம் அடைந்த சகோதரிகள் இருவரும் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தங்களை தாக்கி செல்போனை உடைத்து தங்களது வண்டி சாவியை எடுத்துச் சென்ற கணவன். மனைவி உள்ளிட்ட மூன்று பேர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாதிக்கப்பட்ட சகோதரிகள் போலீஸில் புகார் அளித்துள்ளனர்.