நாக்கைப் பிளந்து டாட்டூ.. ஏரியாவிற்கேச் சென்று ஏலியன்ஸ் கைது.. திருச்சியில் பரபரப்பு!
Author: Hariharasudhan16 December 2024, 6:57 pm
திருச்சியில் நாக்கைப் பிளந்து தான் டாட்டூ போட்டது மட்டுமல்லாமல், பொதுவெளியில் இதற்கு விளம்பரம் அளித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி: திருச்சியைச் சேர்ந்தவர் ஹரிஹரன். இவர் மேல சிந்தாமணி பகுதியில் டாட்டூ ஸ்டூடியோ நடத்தி வருகிறார். இதனிடையே, இவர் மும்பைக்குச் சென்று தனது நாக்கை இரண்டாகப் பிளந்து அறுவை சிகிச்சை செய்து கொண்டு, அதில் டாட்டூவும் போட்டுள்ளார். அது மட்டுமல்லாது, இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார்.
மேலும், தனது நண்பரான ஜெயராமையும் அழைத்து வந்து, இதேபோல் நாக்கைப் பிளந்து அறுவை சிகிச்சை செய்து டாட்டூ போட்டுள்ளார். மேலும், இது தொடர்பான வீடியோக்களையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்த இவர்கள், இதுபோன்ற வித்தியாசமான டாட்டூகளுக்கு தங்களை தொடர்பு கொள்ளுமாறும் விளம்பரம் செய்து உள்ளனர்.
ஆனால், இது போன்ற விபரீதமான செயல்கள் சட்டத்திற்கு புறம்பானது என பலரும் இதற்கு எதிர் கருத்துகளை பதிவிட்டு வந்தனர். இந்த நிலையில், ஏலியன் எமோ ஸ்டூடியோ என்ற பெயரில், சட்டத்திற்குப் புறம்பான செயல்களில் ஈடுபட்டதாக ஹரிஹரன் மற்றும் ஜெயராம் ஆகிய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இதனையடுத்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், 7 மாதங்களுக்கு முன்பு ஹரிஹரன் மும்பைக்குச் சென்று உள்ளார். அங்கு தனது கண்களை நீல நிறமாக மாற்றி உள்ளார். மேலும் இதற்காக 7 லட்சம் ரூபாயை அவர் செலவு செய்துள்ளார் என்பதும் போலீசார் விசாரணையில் தெரிய வந்து உள்ளது. இதற்கு பாடி மாடிஃபிகேஷன் என்றும் அவர்கள் பெயர் வைத்து உள்ளனர்.
இதையும் படிங்க: பழங்குடியினரை காரில் தரதரவென இழுத்துச் சென்ற கொடூரம்.. வயநாட்டில் என்ன நடந்தது?
மேலும், இது போன்ற செயல்களில் பொதுமக்கள் ஈடுபடக் கூடாது என்றும், இத்தகையச் செயல்களில் ஈடுபடுபவர்கள் குறித்து தகவல் அறிந்தால் போலீசாருக்கு தெரிவிக்க வேண்டும் எனவும், இச்செயல் சட்டத்திற்குப் புறம்பானது என்றும் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் ஆணையர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சம்பந்தப்பட்ட டாட்டூ ஸ்டூடியோவுக்கு தற்காலிகமாக சீல் வைக்கப்பட்டுள்ளது.