உதயநிதி ஸ்டாலின் தயாரித்த படத்தை தடை செய்ய வேண்டும்: காவல் ஆணையரிடம் இந்திய தேசிய லீக் கட்சி புகார்
Author: kavin kumar10 February 2022, 11:34 pm
சென்னை: உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் வெளியாக உள்ள எஃப்.ஐ.ஆர் படத்தை தடை செய்ய வேண்டும் என இந்திய தேசிய லீக் கட்சியினர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
மனு ஆனந்த் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் தயாரித்துள்ள படம் எஃப்.ஐ.ஆர். இதில் விஷ்ணு விஷால் , கெளதம் மேனன், கெளரவ் நாராயணன், மஞ்சிமா மோகன், ரெபா மோனிகா ஜான், ரைசா வில்சன் உள்ளிட்ட பலர் விஷ்ணு விஷாலுடன் நடித்துள்ளனர். இப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி இணையத்தில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தி விஷ்ணு விஷால் ‘இர்ஃபான் அஹமது’ என்ற முஸ்லிம் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் தீவிரவாதம் குறித்தும், அதனால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் பேசுவதாக இப்படத்தின் இயக்குநர் மனு ஆனந்த் மற்றும் விஷ்ணு விஷால் உள்ளிட்டோர் சமீபத்தில் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் தற்போது இப்படம் மலேசியா, குவைத், கத்தார் ஆகிய நாடுகளில் தடைசெய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து ட்விட்டரில் விஷ்ணு விஷால் மலேசியா, குவைத், கத்தார் மக்கள் மன்னிக்குமாறு பதிவிட்டிருந்தார். இந்த நிலையில் இப்படத்தை உடனடியாக தடை செய்ய வேண்டும் என இந்திய தேசிய லீக் கட்சி தலைவர் தடா ரஹீம் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தடா ரஹீம், எப்.ஐ.ஆர் திரைப்பட டிரெய்லரில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகள் போல் சித்தரித்து காட்சிகள் இடம்பெற்றுள்ளதாகவும், இதனால் உடனடியாக தமிழகத்தில் இப்படத்தை தடை செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்தார். இந்த படத்தை முதல்வர் ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் தயாரித்து இருப்பது வருத்தம் அளிப்பதாகவும், இஸ்லாமியர்களை தவறாக சித்தரிப்பதால் இஸ்லாமிய இளைஞர்களின் கல்வி, வேலைவாய்ப்பு என எதிர்காலம் பாதிக்கப்படுவதாக அவர் குற்றச்சாட்டிய அவர், எப்.ஐ.ஆர் படத்தை தடை செய்யக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.