நான் வர்றேன்.. அதும் தனியா.. சூடுபிடிக்கும் உதயநிதி – அண்ணாமலை மோதல்!
Author: Hariharasudhan20 February 2025, 5:02 pm
தான் தனியாக அண்ணா சாலைக்கு வருவதாக உதயநிதி எழுப்பிய கேள்விக்கு, அண்ணாமலை சவால் விடுத்து பதிலடி கொடுத்துள்ளார்.
சேலம்: சேலத்தில், பாஜக மாநகர மாவட்டச் செயலாளர் செந்தில் இல்லத்திருமண விழாவில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விடுத்த அழைப்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அண்ணாமலை, “அடுத்த வாரம் சென்னைக்கு வருகிறேன். அண்ணா சாலைக்கு நான் எங்கு, எப்போது வர வேண்டுமென்று திமுகவினர் கூறட்டும். அங்கே நான் வருகிறேன். அண்ணா சாலையில் எந்த இடம் என்று குறிப்பிட்டுச் சொன்னால் தனியாக வருகிறேன்.
பாஜகவினர் யாரும் என்னுடன் வர மாட்டார்கள், நான் தனியாகவே வருகிறேன், திமுகவினர் அனைத்துப் படைகளையும் திரட்டி என்னைத் தடுத்து நிறுத்தட்டும்” என பகிரங்கமாக பதிலடி கொடுத்தார். முன்னதாக, கடந்த பிப்ரவரி 18ஆம் தேதி, திமுக கூட்டணி கட்சிகள், மத்திய அரசுக்கு எதிராக, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
உதயநிதி தொடங்கியது எப்படி? இந்த நிகழ்வில் பேசிய உதயநிதி ஸ்டாலின், “கடந்த முறை தமிழர்களின் உரிமைகளையெல்லாம் பறிக்க முயற்சித்தபோது தமிழக மக்கள் உங்களை ‘Go back Modi’ என்றனர். மீண்டும் தமிழ்நாட்டு மக்களிடம் அப்படியான முயற்சி செய்தால், இந்த முறை ‘Go back Modi’ கிடையாது, ‘Get out Modi’ என்றுதான் தமிழர்கள் சொல்வார்கள்” எனக் கூறியிருந்தார்.
இதனையடுத்து, நேற்று (பிப்.19) கரூரில் நடைபெற்ற மத்திய அரசு பட்ஜெட் விளக்கப் பொதுக் கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, “உதயநிதி ஸ்டாலின் ஆர்ப்பாட்டத்தில், முதலில் நாங்கள் ‘Go back Modi’ என்று சொன்னோம், இம்முறை ‘Get out Modi’ என்று சொல்வோம் எனப் பேசியுள்ளார்.
நீங்க சரியான ஆளா இருந்தால், உங்கள் வாயில் இருந்து ‘Get out Modi’ என்று சொல்லிப் பாருங்கள். உங்கள் வீட்டின் வெளியே ‘பால்டாயில் பாபு’ என போஸ்டர் ஒட்டுவேன்” எனப் பேசினார். இது அரசியல் களத்தில் பரபரப்பை கிளப்பிய நிலையில், இன்று (பிப்.20) சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த உதயநிதி ஸ்டாலினிடம், இது குறித்து கேட்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்த உதயநிதி ஸ்டாலின், “அது அவர்களின் தரம். பிரச்னையை திசைத் திருப்ப முயற்சிக்கிறார்கள். கேட்கும் நிதியை வாங்கித் தருவதற்கு துப்பு இல்லை. 2018ஆம் ஆண்டில் பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு வந்தபோது ‘Go back Modi’ என மக்கள் சொல்ல, அவர்களைச் சந்திக்க முடியாமல் பயந்து சுவரை உடைத்துக்கொண்டு சென்றார்.
போஸ்டர் ஒட்டுவது எல்லாம் ஒரு சவாலா? வீட்டில் தான் இருப்பேன், வரச் சொல்லுங்கள். முன்பே அவர் அண்ணா அறிவாலயத்தைப் பற்றிப் பேசினார். தைரியம் இருந்தால் அண்ணா சாலை பக்கம் வரச் சொல்லுங்கள். மீண்டும் சொல்கிறேன், இந்தப் பிரச்னை உதயநிதிக்கும், பாஜக தலைவருக்கும் இடையேயானது கிடையாது.
தமிழ்நாட்டின் நிதி உரிமை தொடர்பானது. அதற்கு உபயோகமாக ஏதாவது செய்ய முடியுமென்றால் அதனை செய்யச் சொல்லுங்கள்” எனத் தெரிவித்தார். இவ்வாறு அது மேலும் பூதாகரமாகிய நிலையில்தான், தனியாக வருவதாக அண்ணாமலை சவால் விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: இந்த வார தியேட்டரில் கொத்தா இறங்கும் 10 படங்கள்..!
மேலும் இது தொடர்பாக அண்ணாமலை பேசுகையில், “திமுக ஐடி விங்கிற்கு ஒரு நாள் அவகாசம் தருகிறோம். Get out Modi என எவ்வளவு வேண்டுமானாலும் பதிவு செய்யட்டும். நாளை (பிப். 21) காலை 6 மணிக்கு Get Out Stalin என்பதை பதிவிட உள்ளேன். இது எவ்வளவு டிரெண்டாகிறது என்பதைப் பார்ப்போம்.
தமிழகத்தில் செயல்படும் ஆங்கில வழிப் பள்ளிகளிலேயே தமிழ் கற்பிப்பது இல்லை. கல்விக்குக் கொடுக்க வேண்டிய அனைத்து நிதிகளையும் மத்திய அரசு ஒதுக்கி கொடுத்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார். இதனால், உதயநிதி ஸ்டாலின் – அண்ணாமலை மோதல் விவாதப் பொருளாகியுள்ளது.