தொடர் மோசடி… திமுகவைச் சேர்ந்த உளுந்தை ஊராட்சிமன்ற தலைவர் கைது… நள்ளிரவில் புழல் சிறையில் அடைப்பு…!!!

Author: Babu Lakshmanan
28 February 2024, 8:39 am

திமுகவைச் சேர்ந்த உளுந்தை ஊராட்சி மன்ற தலைவர் தொடர் மோசடி புகார்களை தொடர்ந்து, போலீசாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு சொந்தமான பண்ணை தோட்டத்தை கவனித்து வந்த ரமேஷ் என்பவர் கடந்த 2021ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று ஊராட்சி மன்ற தலைவராக தேர்வு செய்யப்பட்டார். பின்னர், படிப்படியாக வளர்ந்து திமுகவின் மாவட்ட செயலாளர் அளவிற்கு உயர்ந்தார். கட்சியில் தனது செல்வாக்கை அதிகரித்துக் கொண்ட இவர், உளுந்தை மற்றும் கலவை பகுதிகளில் உள்ள குளங்களில் செம்மண் எடுத்து லட்சக்கணக்கில் விற்பனை செய்து பணத்தை சம்பாதித்தாக ரமேஷ் மீது போலீஸில் அடுக்கடுக்கான புகார்கள் வந்தன.

மேலிட செல்வாக்கு இருப்பதால், போலீசாரின் நடவடிக்கையில் இருந்து தப்பித்து வந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், அண்ணா நகரைச் சேர்ந்த பழனிவேல் கிராண்ட் ஹவுசிங் எனும் தனியார் நிறுவனத்திற்கு 5.38 ஏக்கர் நிலத்தை விற்பனை செய்தார். அப்போது, அந்த தனியார் நிறுவனத்திற்கு ஆதரவாக பழனிவேலுக்கு கொலை மிரட்டல் விடுத்தாக எஸ்பி அலுவலகத்தில் புகாரும் உள்ளது.

இந்த உளுந்தை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் எக்விடாஸ் என்ற தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலை தொடங்கப்பட்டு பல ஆண்டுகள் ஆன நிலையில், இதுவரை தொழிற்சாலைக்கான அனுமதியோ, கட்டிடம் கட்டுவதற்கான உரிமமோ பெறாமல் தொழிற்சாலைக்கான வரியை செலுத்தாமல் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், உளுந்தை ஊராட்சி மன்ற தலைவரான எம்.கே.ரமேஷ் பொறுப்பேற்ற நாள் முதல் கடந்த நான்காண்டுகளாக வரியை செலுத்த கோரியும், கட்டிட வரைபட அனுமதி பெற வேண்டும் என பலமுறை தொழிற்சாலை நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். கடந்த 25.1. 2024 அன்று தொழிற்சாலை எச் ஆர் மேனேஜர் சின்ன முனியாண்டி என்பவர் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு வந்து தலைவர் எம்கே ரமேஷிடம் பேசியுள்ளார். அப்போது இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து 25.1.2024 சம்பவம் நடைபெற்ற தினத்தன்று மப்பேடு போலீசில் ஊராட்சி மன்ற தலைவர் எம்கே ரமேஷ் புகார் கொடுத்துள்ளார். ஆனால் அந்த புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், சம்பிரதாயத்திற்காக விசாரிக்கவும் செய்யாமல் நேற்று திடீரென தொழிற்சாலை நிர்வாகம் கொடுத்த புகாரின் பேரில், திருவள்ளூர் ஏஎஸ்பி விவேகானந்தா சுக்லா தலைமையிலான போலீசார் காலை 9 மணி அளவில் வீட்டில் இருந்த ஊராட்சி மன்ற தலைவர் எம்கே ரமேஷை வலுக்கட்டாயமாக கைது செய்து தனியிடத்தில் வைத்து விசாரித்துள்ளனர்.

இதனிடையே 12 மணி நேர விசாரணைக்கு பிறகு இரவு பத்து மணி அளவில் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு உடற் பரிசோதனைக்காக போலீசார் அழைத்து வந்தனர். பின்னர், மாவட்ட குற்றவியல் நடுவர் எண் 2-ல் நீதிபதி ராதிகா முன்னிலையில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டதையடுத்து புழல் மத்திய சிறைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டார். இதனால் திருவள்ளூர் பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!