என் அக்கா மகளுக்கு காதல் திருமணமா? விருந்தில் விஷம் கலந்த தாய்மாமன்!
Author: Hariharasudhan9 January 2025, 6:45 pm
தனது எதிர்ப்பை மீறி சகோதரியின் மகளின் காதல் திருமணத்தை ஏற்றதால், வரவேற்பு விருந்தில் விஷம் கலந்த தாய்மாமனை போலீசார் தேடி வருகின்றனர்.
மும்பை: மகாராஷ்டிரா மாநிலம், கோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில், இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் ஒரு இளைஞரைக் காதலித்து வந்துள்ளார். ஆனால், இந்த காதலுக்கு இருவீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எனவே, தனது குடும்பத்தை எதிர்த்து, தான் காதலித்து வந்தவரை திருமணம் செய்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, அப்பெண்ணின் வீட்டார் சம்மதித்து, அவர்களுக்கு நேற்றைய முன்தினம் திருமண வரவேற்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தனர். ஆனால், இதற்கு மணமகளின் தாய்மாமாவான மகேஷ் பாடில் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். இந்த கோபத்தின் உச்சத்தில், வரவேற்பு விருந்து உணவில் மகேஷ் பாடில் விஷம் கலந்துள்ளார்.
அப்போது, மண்டபத்திலிருந்த சிலர், இதைக் கவனித்து உடனடியாக தடுத்துள்ளனர். ஆனால், தனது சம்மதம் இல்லாமல் இந்த திருமணம் நடந்ததால் இவ்வாறு செய்ததாக உறவினர்கள் கூறியுள்ளனர். இதனிடையே, அவர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். மேலும், உணவில் விஷம் கலக்கப்பட்டதை அறிந்ததால், விருந்தினர் யாரும் உணவை சாப்பிடவில்லை. இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
இதையும் படிங்க: திருப்பதி கூட்ட நெரிசலில் என் மனைவி எப்படி இறந்தார் தெரியுமா? போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டை மறுக்கும் உறவினர்கள்!
பின்னர், இது குறித்து தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து, விஷம் கலக்கப்பட்ட உணவின் மாதிரிகளைச் சேகரித்து, ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். இதனையடுத்து, சட்டப் பிரிவு 286 மற்றும் 125 ஆகியவற்றின் கீழ் மகேஷ் பாடில் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார், தப்பியோடிய தாய்மாமனைத் தேடி வருகின்றனர்.