போலீசாரின் மெத்தனமா திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை சம்பவம்..? இரு தினங்களுக்கு முன்பு திருவள்ளூரில் பிள்ளையார்சுழி போட்ட கும்பல்..!!
Author: Babu Lakshmanan13 February 2023, 6:00 pm
திருவள்ளூர் : திருவண்ணாமலையில் கைவரிசையை காட்டிய கும்பல் திருவள்ளூர் அருகே ஏடிஎம்மில் திருட முயன்றதாக போலீசாருக்கு எழுந்த சந்தேகம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பூண்டி அருகே உள்ள நெய்வேலி கிராமத்தில் இந்தியா 1 ஏடிஎம் ஐ ஸ்பிரே அடித்து கடந்த சனிக்கிழமை இரவு மர்ம நபர்கள் கொள்ளையடிக்க முயன்றுள்ளனர். ஹெச்டிஎஃப்சி வங்கியில் இருந்து பணத்தை நிரப்புவதற்காக வேனில் பணத்தைக் கொண்டு வந்த ஊழியர்கள் நிரப்ப வந்த போது எந்திரத்தில் ஸ்பிரே அடித்து, அதில் மர்ம நபர்கள் கைவரிசையை காட்டி இருந்ததை பார்த்துள்ளனர்.
இதையடுத்து, அவர்கள் அளித்த தகவலின் பேரில் பெண்ணாலூர் பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து பூண்டி கூட்டு சாலையில் இருந்த மூன்று சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். பூண்டி அருகே முக்கியசாலை சந்திப்பில் இருந்த இந்தியா ஒன் ஏடிஎம்மில் மர்ம நபர்கள் ஸ்பிரே அடித்து கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும், ஏடிஎம்மில் இருந்த 25,200 பணம் இருந்ததால் இந்தியா ஒன் ஏடிஎம்ஐ நிர்வகித்து வருபவர்களும், காவல்துறையினரும் நிம்மதி அடைந்தனர்.
கடந்த சனிக்கிழமை கொள்ளை போனது குறித்து போலீசார் தகவல் தெரிந்தும், திங்கட்கிழமை வரை சாவகாசமாக வந்து ஏடிஎம்ஐ திறந்து விசாரித்து சென்றது குறிப்பிடத்தக்கது.
காஞ்சிபுரம் எஸ் பி நேரில் விசாரணை செய்தார் விரைவில் ஏடிஎம்மில் ஸ்பிரே அடித்து கொள்ளையடிக்கும் முயன்ற மர்ம நபர்கள் யார் என்பது குறித்து கண்டறிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார் .
திருவண்ணாமலையில் ஏடிஎம்மில் கைவரிசியை காட்டிய கும்பல் ஆந்திரா வழியாக தப்பிச்சென்றார்களா..? என்ற கோணத்தில் மாநில எல்லையில் சோதனை நடத்திக் கொண்டிருந்த சமயத்தில் திருவள்ளூர் அருகே நிகழ்ந்துள்ள இந்த கொள்ளை முயற்சி சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.