அதிமுகவை சமாதானம் செய்யும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்? கோவையில் நடந்த திடீர் ட்விஸ்ட்!!

Author: Udayachandran RadhaKrishnan
3 October 2023, 1:35 pm

அதிமுகவை சமாதானம் செய்யும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்? கோவையில் நடந்த திடீர் ட்விஸ்ட்!!

தமிழகத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை , அதிமுக தலைவர்களை தொடர்ந்து விமர்சித்து வந்த காரணத்தால், ஒரே கூட்டணியில் இருந்த அதிமுக – பாஜக கட்சிகளுக்கு இடையே கருத்து மோதல்கள் ஏற்பட்டு, இறுதியில் பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறுவதாக அதிமுக அதிகாரபூர்வமாக அறிவித்தது.

மேலும், 2024 நாடாளுமன்ற தேர்தல் மட்டுமின்றி இனி வரும் தேர்தல்களிலும் கூட்டணி இல்லை என்றும் திட்டவட்டமாக அதிமுக தலைமை அறிவித்தது.

தேசிய ஜனநாயக கூட்டணியில் முக்கிய அங்கமாக இருந்த அதிமுக விலகியதால், இதுகுறித்து விளக்கம் அளிக்க பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேற்று முன்தினம் டெல்லி சென்றார். அங்கு, பாஜக தேசிய தலைவர்களான ஜே.பி.நட்டா, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்து அதிமுக – கூட்டணி முறிவு குறித்து விளக்கம் அளித்தார். இந்த விளக்கங்களை பாஜக தலைவர்கள், மத்திய அமைச்சர் அமித்ஷாவிடம் அளிக்க உள்ளனர்.

இந்நிலையில், இன்று அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கோவை வந்துள்ள நிர்மலா சீதாராமன் உடன் அதிமுக எம்எல்ஏக்கள் சந்தித்தனர். இந்த சந்திப்பில் , அதிமுக எம்எல்ஏக்கள் பொள்ளாச்சி ஜெயராமன், அமுல் கந்தசாமி, ஏ.கே.செல்வராஜ் , வரதராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர் . உடன் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசனும் கலந்துகொண்டார்.

அதிமுக – பாஜக கூட்டணி முறிவு என அதிகாரபூர்வமாக அறிவித்த பின்னர், அதிமுக எம்எல்ஏக்கள் – மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்திப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.

அதிமுக பாஜக கூட்டணி முறிவுக்கு பின் பாஜக தனித்து போட்டியிட முடியுமா என்பது குறித்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாரமன் தமிழக பாஜக நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து மேலிடத்தில் அறிக்கை தாக்கல் செய்திருந்து நினைவுகூரத்தக்கது.

இந்த சந்திப்பை அடுத்து, நிர்மலா சீதாராமன் மத்திய அரசின் கடனுதவி திட்டத்தின் கீழ் 948 வங்கிகள் மூலம் 3,749 கோடி ரூபாய் கடன் வழங்கும் திட்டத்தை துவங்கி வைத்தார். மேலும், சிட்பி MSME வங்கியின் புதிய கிளையையும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் துவங்கி வைத்தார்.

  • Why no action is taken even after filing a complaint against Vijay and Trisha விஜய், திரிஷா மீது புகார் கொடுத்தும் ஏன் ஆக்ஷன் எடுக்கல ? சீறிய பெண் பிரபலம்!