கைகளில் தள்ளினாலே பெயர்ந்து விழும் சுற்றுச்சுவர்… தரமற்ற முறையில் கட்டப்பட்ட அரசுப்பள்ளியின் சுவர்.. அரசு நடவடிக்கை எடுக்குமா..?
Author: Babu Lakshmanan7 October 2022, 9:40 am
ஈரோடு ; சத்தியமங்கலம் அருகே அரசு பள்ளியை சுற்றி கட்டப்பட்ட மதில் சுவர் தரமற்ற முறையில் கட்டப்பட்டுள்ளதால், விரைவில் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளதாக பொதுமக்கள் குற்றச்சாட்டுகின்றனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள உக்கரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மில்மேடு பகுதியில் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு அரசு உயர்நிலைப் பள்ளி கட்டிடம் புதிதாக கட்டப்பட்டது. இப்பள்ளியில் உக்கரம், மில்மேடு, காளிகுளம், மல்லநாயக்கனூர், மேட்டுக்கடை உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட ஊர்களில் இருந்து சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர்.

இப்பள்ளியை சுற்றி மதில் சுவர் கட்ட சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய பொது நிதியிலிருந்து 46 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டு ஒப்பந்ததாரர் மூலம் சுமார் 630 மீட்டரில் மதில் சுவர் கட்டப்பட்டுள்ளது.
கட்டப்பட்டு ஒரு மாதங்களே ஆன நிலையில், தரமற்ற செங்கல், சிமெண்ட் மற்றும் மணல்களைக் கொண்டு கட்டப்பட்ட மதில் சுவர், தற்போது இடிந்து விழுந்துள்ளதாகவும், இதனால் மதில் சுவர் அருகே விளையாடும் பள்ளி குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும், தரமற்ற மதில் சுவர்களை பொதுமக்கள் வெறும் கைகளாலயே தள்ளினால் இடிவதாகக் கூறி, மதில் சுவர்களை பெயர்த்தெடுத்தனர்.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு தரமற்ற முறையில் மதில் சுவர் அமைத்த ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தற்போது உள்ள தரமற்ற முறையில் கட்டப்பட்டுள்ள மதில் சுவரை இடித்துவிட்டு தரமான முறையில், மதில் சுவர் எழுப்பி தர வேண்டும் என பள்ளிக் குழந்தைகளின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.