‘கான்கிரிட்டுக்கு கம்பி யூஸ் பண்ண மாட்டாங்களாம்’ ; தரமற்ற முறையில் கட்டப்படும் மழைநீர் வடிகால் கால்வாய்… பொதுமக்கள் புகார்..!!
Author: Babu Lakshmanan3 November 2022, 2:29 pm
தூத்துக்குடி ; தூத்துக்குடி மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மழை நீர் வடிகால் கால்வாய் அமைக்கும் பணிகள் தரமற்ற முறையில் நடைபெற்று வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
தூத்துக்குடி மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் நகர் முழுவதும் மழை நீர் வடிகால் கால்வாய் அமைக்கும் பணிகளும் நடந்து வருகிறது.
மழைகாலங்களில் அதிக அளவில் மழை நீர் தேங்கும் பகுதிகளில் மாநகராட்சிக்கு உட்பட்ட 4வது வார்டு அம்பேத்கர் நகர் பகுதியும் ஒன்று. இந்தத் பகுதியில் மழை நீர் வடிகால் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஆனால், இந்த பகுதியில் கால்வாய் அமைக்கும் பணி தரமற்ற முறையில் நடைபெற்று வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
குறிப்பாக, கால்வாய்களை மூடும் பொழுது கம்பிகள் ஏதும் இல்லாமல் கான்கிரீட் போடப்படுவதாகவும், கால்வாய்க்கு மேல் மூடி போடாமல் பணிகள் நடைபெறுவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இவ்வாறு கம்பிகளில்லாமல் போடும் பொழுது, அது உடனடியாக உடைந்து விடுவதுடன், பெரும் விபத்து ஏற்படுவதற்கும் வாய்ப்புள்ளதாக குற்றம் சாட்டும் பொதுமக்கள், இதை போல் நகரின் பல பகுதிகளிலும் இதுபோன்ற தரமற்ற முறையில் மழை நீர் வடிகால் கால்வாய் அமைக்கப்படுவதாக புகார் தெரிவிக்கின்றனர்.
எனவே, தமிழக அரசு உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.