கனவிலும் நினைக்க முடியாத ‘சர்ப்ரைஸ் கிஃப்ட்’ : அரசு பள்ளியில் பயின்று வரும் 12ஆம் வகுப்பு மாணவிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த HM!!

Author: Udayachandran RadhaKrishnan
28 October 2022, 3:08 pm

விழுப்புரத்தில் ஆசிரியையின் சவாலை ஏற்று பனிரெண்டாம் வகுப்பு மாணவி காலாண்டு தேர்வில் முதல் மதிப்பெண் எடுத்து அசத்தியதால் மாணவியை ஒரு நாள் பள்ளி தலைமை ஆசிரியையாக அமர வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் திரு.வி.க. வீதியில் செயல்பட்டு வரும் அரசு மகளிர் மாதிரி மேல்நிலைப்பள்ளி 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.

இப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வரும் சசிகலா காலாண்டு தேர்வு தொடங்குவதற்கு முன்பு பள்ளியில் நடந்த இறைவணக்க கூட்டத்தின்போது, காலாண்டு தேர்வில் 10 மற்றும் 12-ம் வகுப்புகளில் முதல் மதிப்பெண் பெறும் மாணவிகளுக்கு சர்ப்ரைஸ் கிப்ட் ஒன்று காத்திருப்பதாகவும் மாணவிகள் அனைவரும் நல்லமுறையில் படிக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.

அதன் பேரில் மாணவிகள் காலாண்டு தேர்விற்கு போட்டி போட்டு கொண்டு தயாராகி தேர்வு எழுதிய நிலையில் காலாண்டு தேர்வில் 12ஆம் வகுப்பில் 600-க்கு 581 மதிப்பெண்கள் பெற்று முதல் மாணவியாக விழுப்புரம் ஜி.ஆர்.பி. தெருவை சேர்ந்த பணிரெண்டாம் வகுப்பு மாணவி எஸ்.லோகிதா தேர்ச்சி பெற்றுள்ளார்.

இதனையடுத்து பள்ளி தலைமை ஆசிரியர் சசிகலா மற்றும் ஆசிரியர்கள் ஒன்றிணைந்து தலைமை ஆசிரியர் இருக்கையில் அமர வைத்து அவருக்கு கிரீடம் சூட்டி, ஒரு நாள் தலைமை ஆசிரியர் பதவி வழங்கி அழகு பார்த்துள்ளனர்.

முதல் மதிப்பெண் பெற்ற மாணவி ஒரு நாள் முதல்வன் போல ஒரு நாள் தலைமை ஆசிரியையாக ஒரு நாள் முழுக்க பணியாற்றினார். இச்சம்பவம் மாணவிகள் மத்தியில் முன்னுதாரணமாக அமைந்ததோடு மட்டுமல்லாமல் அரையாண்டு தேர்வில் முதல் மதிப்பெண் பெறும் மாணவி ஒரு நாள் தலைமை ஆசிரியையாக பணியாற்ற வாய்ப்பு வழங்கப்படும் என தலைமை ஆசிரியர் சசிகலா மாணவிகள் மத்தியில் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் அனைவரது மத்தியிலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் அரசு பள்ளிகளுக்கு எல்லாம் முன்னுதாரணமாக திகழ்கின்ற நிகழ்ச்சியாக இது அமைந்துள்ளது.

மேலும் மாணவி லோகிதா தனக்கு ஒருநாள் தலைமை ஆசிரியர் பதவி வாய்ப்பு கிடைக்கும் என்று கனவில்கூட நான் நினைத்து பார்க்கவில்லை என்றும் தலைமை ஆசிரியர் இது போன்று செய்தது என்னை போன்ற மற்ற மாணவிகளையும் அதிக மதிப்பெண்கள் பெற உந்துதலாக அமையும் எனவும் மீண்டும் இந்த பதவியை தக்க வைத்து கொள்ள இது உந்துததலாகவும் பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் பிடிப்பேன் என மாணவி தெரிவித்துள்ளார்.

  • AR Murugadoss about SIkandar movie remake of Thalapathy's Sarkar விஜயால் ஏ.ஆர்.முருகதாஸுக்கு வந்த பெரும் சிக்கல்.. இதுதான் முடிவு!