’சபாநாயகர் தனிச் செயலரின் மனைவி நான்’.. மிரட்டும் ஆசிரியை? இரட்டைமலை சீனிவாசன் பேத்தி பரபரப்பு புகார்!
Author: Hariharasudhan1 January 2025, 12:19 pm
சென்னை, கோடம்பாகத்தில் பட்டியலின மாணவர்களிடம் அரசுப் பள்ளி ஆசிரியர் பாகுபாடு காட்டுவதாக இரட்டைமலை சீனிவாசனின் பேத்தி புகார் அளித்துள்ளார்.
சென்னை: சென்னை மாவட்டம், கோடம்பாக்கத்தில் அரசு மேல் நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில், இந்தப் பள்ளியில் பயிலும் பட்டியலின மாணவர்கள் மீது 3 ஆசிரியர்கள் தீண்டாமைக் கொடுமையில் ஈடுபடுவதாக புகார் எழுந்துள்ளது.
இதனையடுத்து, இது தொடர்பாக காவல் ஆணையர் அலுவலகத்தில், பாதிக்கப்பட்ட மாணவரின் உறவினரும், சமூக சீர்த்திருத்தவாதியான இரட்டை மலை சீனிவாசனின் பேத்தியுமான ரேவதி புகார் அளித்து உள்ளார். இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர், “கோடம்பாக்கத்தில் உள்ள பதிப்பகச்செம்மல் க.கணபதி அரசு மேல்நிலைப் பள்ளியில் மீனாட்சி என்ற ஆசிரியை உள்ளார். இவர், மாணவர்களை சாதி பெயரைச் சொல்லி அநாகரீகமாக பேசுகிறார். அது மட்டுமல்லாமல், அவர்களை மட்டும் வகுப்பறையை சுத்தம் செய்யச் சொல்லி கொடுமைப்படுத்துகிறார்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: நள்ளிரவில் திருத்தணி கோவிலுக்கு வந்த பிரபல நடிகர்… புத்தாண்டில் பக்தர்கள் சர்ப்ரைஸ்!!
இதனையடுத்து பேசிய மாணவரின் தந்தை, “எனது மகன் உள்பட பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த 4 மாணவர்களை தரையில் உட்கார வைத்து ஆசிரியர் பாகுபாடு காட்டுகிறார். மாணவர்கள் மத்தியில் தீண்டாமைக் கொடுமையில் ஈடுபடும் ஆசிரியை மீனாட்சி, தான் சபாநாயகர் அப்பாவுவின் தனிச் செயலாளரின் மனைவி என்றுக் கூறி மிரட்டுகிறார்” என காவல் ஆணையரிடம் அளிக்கப்பட்ட புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாக அவர் தெரிவித்தார்.