உசிலம்பட்டி அருகே அரங்கேறிய ‘அசுரன்’ சம்பவம்.. தீண்டாமை கொடுமையின் உச்சம்.. நடந்தது என்ன?

Author: Hariharasudhan
19 January 2025, 6:51 pm

மதுரை, உசிலம்பட்டி அருகே 17 வயது சிறுவனுக்கு நடந்த தீண்டாமை கொடுமை சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.

மதுரை: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள சங்கம்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் 17 வயது சிறுவன். பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த இவரை, கடந்த ஜனவரி 16ஆம் தேதி கிராமத்தின் அருகில் உள்ள கண்மாய்க்கு மாற்று சமூகத்தைச் சேர்ந்த ஆறு நபர்கள் அழைத்துச் சென்றுள்ளனர்.

பின்னர், அவரை அடித்து சித்திரவதை செய்துள்ளனர். குறிப்பாக, அவர் மீது சிறுநீர் கழித்ததாக கூறப்படுகிறது. மேலும், அழைத்துச் சென்ற ஆறு பேரும் தங்களது காலில் அச்சிறுவனை விழ வைத்துள்ளனர். மேலும், அந்த கண்மாய் அருகில் இருந்த பலரது காலிலும் அவர்கள் விழ வைத்துள்ளனர்.

அதில், ஆறு வயது சிறுவன் காலிலும் 17 வயது சிறுவன் விழுந்த சம்பவம் அரங்கேறி உள்ளதாக கூறப்படுகிறது. பின்னர், இது குறித்து அச்சிறுவன் தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனை அடுத்து, அச்சிறுவனின் தந்தை உசிலம்பட்டி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

untouchability issues in Usilampatty

இந்தப் புகாரின் பேரில் வன்கொடுமை சட்டத்தின் கீழ், சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் கிஷோர், உக்கிரபாண்டி, பிரம்மா, சந்தோஷ், நித்திஷ் மற்றும் மணிமுத்து ஆகிய 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தொடர்ந்து, தலைமறைவாக உள்ள ஆறு பேரையும் உசிலம்பட்டி நகர் காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். தற்போது, பட்டியலின சிறுவன் மீது அரங்கேறியுள்ள இந்த தீண்டாமை கொடுமை சம்பவம் மதுரை மாநகரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • உன்னை நீயே நம்பு போதும்.. தெறிக்கும் வரிகளில் வெளியான Vidaamuyarchi Second single!
  • Leave a Reply