பட்டியலின பெண் சமைத்ததால் காலை உணவு திட்டத்திற்கு எதிர்ப்பு.. மாணவர்களின் TC கேட்டு பெற்றோர்கள் தகராறு : திருப்பூரில் அதிர்ச்சி..!!
Author: Babu Lakshmanan26 August 2023, 5:52 pm
அரசு பள்ளியில் முதலமைச்சர் துவக்கி வைத்த காலை உணவு திட்டத்தில் பட்டியலினத்தை சேர்ந்த பெண் உணவு சமைத்ததால், காலை உணவை புறக்கணித்து குழந்தைகளுக்கு மாற்றுச் சான்றிதழை தருமாறு பெற்றோர்கள் கேட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் காலை உணவு திட்டத்தை தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் துவக்கி வைத்தார். திருப்பூர் மாவட்டம் அவிநாசி அடுத்த பெருமாநல்லூர் அருகே வள்ளிபுரம் ஊராட்சி காரிங்கராயன் பாளையத்தில் உள்ள , ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியிலும் தமிழக அரசின் காலை சிற்றுண்டி திட்டம் தொடங்கப்பட்டது. பள்ளியில் 47 பேர் படித்து வந்தனர்.
இந்நிலையில், ஆதிராவிடர் காலனி பகுதியைச் சேர்ந்த தீபா என்பவர் உணவு சமைத்து பள்ளி மாணவர்களுக்கு பரிமாறி உள்ளார். இதை அறிந்த ஒரு தரப்பினர், பள்ளி குழந்தைகளை உணவை சாப்பிட அனுமதிக்காமல், ‘பள்ளி மாற்றுச் சான்றிதழ் கொடுங்கள், வேறு பள்ளியில் சேர்த்துக் கொள்கிறோம்,’ என காலை உணவை புறக்கணித்து குழந்தைகளை சாப்பிட விடாமல் தடுத்துள்ளனர். இந்த சம்பவத்தை அறிந்த ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் உணவு சமைக்கும் தீபாவை மாற்ற முடியாது என அரசு தரப்பில் தெரிவித்ததால், சமாதானம் ஆகாத ஒரு தரப்பினர் உணவை புறக்கணித்து சென்றனர்.
உணவு சமைத்தவர் பட்டியல் இனத்தை சேர்ந்தவர் என்பதால் பள்ளி குழந்தைகளுக்கு உணவை வழங்க வேண்டாம் என சிலர் எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சூழலில், இன்று மீண்டும் தீபா உணவு சமைத்த நிலையில், 34 பள்ளிக்குழந்தைகள் உணவருந்தியுள்ளனர். 13 பேர் பள்ளிக்கு விடுப்பு எடுத்துள்ளனர். இது குறித்து வள்ளிபுரம் பஞ்சாயத்து தலைவர் முருகேசனிடம் கேட்ட போது, சம்பவம் உண்மைதான் எனவும், ஒரே ஊரை சேர்ந்தவர்கள் என்பதால் சிலர் எதிர்ப்பு தெரிவித்ததாகவும், பெற்றோர் அல்லாத சிலரும் தகவலறிந்து வந்து எதிர்ப்பு தெரிவித்தனர்.
இது குறித்து தற்போது பேச்சுவார்த்தை நடத்தி குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி உள்ளனர். இன்று பெரும்பாலான குழந்தைகள் காலை உணவை உட்கொண்டனர். இனி இது போன்று நடைபெறாது, என தெரிவித்தார். தொடர்ந்து எதிர்ப்பு எழுந்தால் காவல்துறை மூலம் முறையான சட்ட பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக உணவு சமையலர் தீபாவை தொடர்பு கொண்ட போது, நேரடியாக பேசவோ, பேட்டி வழங்கவோ மறுத்த அவர், காலையில் குழந்தைகளுக்கு உணவு தயார் செய்து பரிமாறிய பின்னர், பனியன் நிறுவனத்திற்கு பணிக்கு செல்வதாகவும், தன்னிடம் நேரடியாக யாரும் பிரச்சினை செய்யவில்லை எனவும், மற்றவர்கள் தெரிவித்த பின்னரே தனக்கு இந்த எதிர்ப்பு குறித்த சம்பவம் தெரியவந்தது எனவும், தொடர்ந்து பணி செய்ய போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக திருப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர் வேலுச்சாமியிடம் கேட்ட போது, சம்பவம் குறித்து அறிந்து உடனே பள்ளிக்கு சென்றதாகவும், பெருமாநல்லூர் காவல் துறையினர், பஞ்சாயத்து தலைவர் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தி கிராம மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியதாகவும், தீண்டாமை கொடுமை மற்றும் வழக்குகள் குறித்து எடுத்துரைத்து தெளிவுபடுத்தி உள்ளோம். இனி இது போன்ற சம்பவம் நடைபெறாது, என உறுதியளித்துள்ளார்.
கடந்த 2018 ஆம் ஆண்டு அவினாசியில் திருமலைக்கவுண்டம்பாளையத்தில் அரசு உயர்நிலைப்பள்ளியில் சமையலர் பட்டியல் இனத்தவர் என்பதால் சமைக்கக் கூடாது என பாத்திரங்களை தூக்கி எறிந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பெண் சமையலரை கடுமையாக திட்டிய சம்பவம் தொடர்பாக தீண்டாமை வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கீழ வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், அவ்வழக்கு நடைபெறாமல் வட்டார வளர்ச்சி அலுவலர் மீனாட்சி சென்னை உயநீதி மன்றத்தில் தடை ஆணை பெறப்பட்டு, விசாரணை நடைபெறாமல், கடந்த 5ம் தேதி தடை காலம் முடிந்து விசாரணை திருப்பூர் நீதிமன்றத்தில் கொண்டு வரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.