நெஞ்சுவலி நாடகம்.. சிறையில் விஜயராகவன் : V3 Online Tv நிறுவனர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!
Author: Udayachandran RadhaKrishnan3 March 2024, 5:27 pm
நெஞ்சுவலி நாடகம்.. சிறையில் விஜயராகவன் : V3 Online Tv நிறுவனர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!
Myv3 ads நிறுவனம் மீது கோவை மாநகர காவல் துறையினர் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் அந்த நிறுவனம் குறித்து போலீசார் விசாரித்த பொழுது அந்த நிறுவனத்திற்கு மூலிகை பொருட்கள், சித்த மாத்திரைகள் போன்றவற்றை விஜயராகவன் என்பவர் வழங்கி வருவது தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து விஜயராகவனிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் ஏற்கனவே “v3 online TV” என்ற நிறுவனத்தை நடத்தி வந்த நிலையில் அதை மூடிவிட்டு, சித்தா பொருட்கள் தயாரித்து விற்பனை செய்து “myv3″ads நிறுவனத்திற்கு கொடுத்து வந்ததும் தெரியவந்தது.
“Myv3ads” நிறுவனத்துக்கு சித்தத மருத்துவ பொருட்கள் அனுப்புவது தொடர்பாக விஜயராகவனிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர் அண்ணாமலை பல்கலைகழகத்தில் முனைவர் படிப்பு படித்து இருப்பதாக போலிச் சான்றிதழ்களை வைத்துக்கொண்டு சித்த மருந்து பொருட்களை தயாரித்து வருவதும் தெரிய வந்தது.
போலீஸ் விசாரணையில் போலி சான்றிதழ்களை கொடுத்து ஏமாற்றியது தெரிய வந்த நிலையில், அவரை நேற்று முன் தினம் இரவு மதுரையில் போலீசார் கைது செய்தனர்.
அப்பொழுது நெஞ்சுவலி என்று சொன்னதால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது. அவருக்கு உடல் நிலையில் எந்த பிரச்சினையும் இல்லை என்பதால் போலீசார் அவரை கோவை அழைத்து வந்தனர்.
கோவையில் நேற்று போலீசார் விசாரணை மேற்கொண்டு இருந்த பொழுது தனக்கு சர்க்கரை நோய் இருப்பதாக கூறியதை தொடர்ந்து, கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
பரிசோதனையில் அவரது உடல் நலம் நன்றாக இருப்பது தெரியவந்ததை தொடர்ந்து கோவை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு இரவு மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட விஜயராகவன் , தனக்கு உயர் ரத்த அழுத்தம் இருப்பதாகவும் , சர்க்கரை நோய் மற்றும் வெரிகோஸ் பிரச்சினைகள் இருப்பதாகவும் சிறை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து விஜயராகவனை மீண்டும் கோவை அரசு மருத்துவமனைக்கு நேற்றிரவு அழைத்து வந்த சிறைதுறை அதிகாரிகள் அங்கு அனுமதித்தனர்.
விஜயராகவனுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது