அமைச்சர் கண் முன்னே ஆற்றில் அடித்து வரப்பட்ட பசு மாடு… உயிருடன் மீட்கப்பட்டதால் பொதுமக்கள் நெகிழ்ச்சி…!!
Author: Babu Lakshmanan9 January 2024, 9:01 pm
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே மழை வெள்ளத்தை பார்வையிடச் சென்ற அமைச்சர் பெரியசாமி கண்முன்னே வைகை ஆற்றில் அடித்து வரப்பட்ட பசு மாடு உயிருடன் மீட்கப்பட்டது
திண்டுக்கல் மாவட்டத்தில் கனமழை பெய்து வரும் நிலையில் மாவட்டத்தின் வைகை ஆற்றின் கரையோர பகுதிகளை ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் இ.பெரியசாமி ஆய்வு மேற்கொண்டார். வைகை அணையில் இருந்து 3 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ள நிலையில் தொடர் மழை காரணமாக காற்றாற்று வெள்ளமும் சேர்ந்து கொண்டதால் வைகை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
இதன் தொடர்ச்சியாக வத்தலகுண்டு அருகே ரெங்கப்பநாயக்கன்பட்டி வைகை ஆறு கரையோர பகுதிகளை அமைச்சர் இ.பெரியசாமி ஆய்வு மேற்கொண்டார். வைகை ஆற்றின் பாலத்தின் மீது நின்று அவர் தண்ணீர் வரத்து குறித்து பார்வையிட்டுக் கொண்டிருந்த போது, கரையில் மேய்ந்து கொண்டிருந்த பசு மாடு ஒன்று திடீரென தவறி ஆற்றுக்குள் விழுந்து தத்தளித்தது.
கண்முன்னே பசுமாடு ஆற்றில் விழுந்து அடித்து வரப்படுவதைக் கண்டு பதறிய அமைச்சர் இ.பெரியசாமி உடனடியாக பொதுமக்கள் உதவியுடன் ஆற்று தண்ணீரில் தத்தளித்து கொண்டிருந்த பசு மாட்டை உயிருடன் மீட்டார். இச்சம்பவம் அப்பகுதி பொதுமக்கள் இடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
பின்னர் கிராம மக்களிடம் கோரிக்கையை கேட்டறிந்த அமைச்சர் இ.பெரியசாமி வைகை ஆறு கரையோரம் விரைவில் தடுப்பு சுவர் கட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்தார்