திமுக அனுதாபிக்கே அப்படினா.. நிர்வாகிக்கு? கிழித்தெடுத்த வானதி சீனிவாசன்!
Author: Hariharasudhan8 January 2025, 6:57 pm
அண்ணா பல்கலை வன்கொடுமை விவகாரத்தில் முதலமைச்சருடைய பதில் உணமையிலேயே திருப்திகரமாக இல்லை என வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.
சென்னை: இது தொடர்பாக, தேசிய மகளிரணித் தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் தனியார் தொலைக்காட்சி சேனலுக்கு அளித்த பேட்டியில், “ஞானசேகரன் திமுக உறுப்பினர் அல்ல, நிர்வாகி அல்ல, ஆனால் அவர் திமுக அனுதாபி என்பதை முதலமைச்சரே ஒத்துக்கொள்கிறார்.
அதில் எங்கள் கேள்வி என்னவென்றால், ஒரு திமுக அனுதாபி இத்தனை சக்தி வாய்ந்த துணை முதலமைச்சர், திமுக அமைச்சருடன் இவ்வளவு நெருக்கமாக இருக்க முடியுமென்றால், ஒருவேளை குற்றவாளி சக்தி வாய்ந்த கட்சியினுடைய நிர்வாகியாக இருந்திருந்தால், இந்த வழக்கில் எப்படி நீதி கிடைத்திருக்கும்?
முதலமைச்சருடைய பதில் உணமையிலேயே திருப்திகரமாக இல்லை. பெண்களின் பாதுகாப்புக்காக, ஒவ்வொருநாளும் படும் துயரங்களுக்கு எதிராக இந்த அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்தோ, முன்னேற்பாடுகள் குறித்தோ முதலமைச்சர் குறிப்பிடவில்லை.
முழுக்க முழுக்க ஆளுநர் மீதும், மத்திய அரசின் மீதும் சம்பந்தமில்லாமல் கல்வித் துறையைப் பற்றியும், பொள்ளாச்சி சம்பவம் குறித்தும் இங்கு குறிப்பிடுவது அவசியம் இல்லாதது. அவரது பதில் எங்களுக்கு திருப்திகரமாக இல்லை. போலீசை பொறுப்பில் வைத்திருக்கும் முதலமைச்சர், அரசியல் கட்சிகள் நியாயமாக விசாரணை நடைபெறவில்லை என்றால், ‘ஆதாரங்களை நீங்கள் கொடுங்கள்’ எனக் கூறினால் என்ன அர்த்தம்?
இதையும் படிங்க: பட்டப்பகலில் இளைஞரை வெட்டிக் கொலை செய்த கும்பல்.. காவல் நிலையம் அருகே நடந்த கோரம்!
காவல்துறையை பேசாமல் எதிர்கட்சிகளிடமே கொடுத்துவிடலாமே. யார் குற்றச் செயல்களில் ஈடுபட்டாலும், அவர்கள் மீது தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண்கள் இப்போது தான் சிறிது சிறிதாக தைரியமாக வந்து கொண்டிருக்கின்றனர். அவர்களை எல்லாம் முடக்குவது போன்று இந்தச் சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கிறது” எனத் தெரிவித்தார்.
முன்னதாக, அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரன், திமுக உறுப்பினர் அல்ல எனவும், அவர் திமுக அனுதாபி எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று அதிமுக கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.