ஒருவேளை திமுகவின் கணக்கு தப்பாகிவிடும்.. கணித்த வானதி சீனிவாசன்!
Author: Hariharasudhan21 March 2025, 4:49 pm
ஒருவேளை எதிர்கட்சியினர் ஒன்று சேர வாய்ப்பு இருந்தால் அவர்கள் கணக்கு தப்பாகிவிடுமோ என்ற எண்ணத்தில் திமுகவினர் இருப்பதாக வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான இன்றைய விவாதத்தின் போது, விலையில்லா மடிக்கணினி திட்டம் கைவிடப்பட்டது குறித்து அதிமுக உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி மடிக்கணினி திட்டம் குறித்து கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, “எம்ஜிஆர் திமுகவில் இருந்த போதும், வெளியேறிய போதும் அவர் மீது பெரும் மதிப்பு வைத்திருந்தவர்கள் நாங்கள்.
அவருடைய திரைப்படம் வெளிவந்த போதுகூட அதைப் பார்த்து எப்படி இருக்கிறது என பேசும் அளவிற்கு இருந்தோம். ஆனால், இப்போது அதிமுகவில் கூட்டல், கழித்தல் என எல்லாக் கணக்குகளையும் வேறு ஒருவர் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதிமுக தொண்டர்களை அபகரிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
லேப்டாப் திட்டத்திற்கு ஆண்டுக்கு 2,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சரியாக ஒரு மடிக்கணினி 20,000 ரூபாய் எனும் அடிப்படையில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மடிக்கணினி போல, உங்கள் மடியில் உள்ள கனத்தை அவர்கள் பறித்துக் கொள்வார்கள். அதை நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்” என்றார்.

அப்போது பாஜக எம்எல்ஏ வானிலை சீனிவாசன் சிரித்ததை சுட்டிக்காட்டிய அமைச்சர் தங்கம் தென்னரசு, “என் கருத்துக்கு பாஜக வானதி சீனிவாசனே சிரித்துவிட்டார். பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது என்றுதான் அர்த்தம்” என்றார். அமைச்சரின் இந்தப் பேச்சுக்கு அதிமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையும் படிங்க: 4வது குழந்தைக்கு நான் ரெடி..’ஆஸ்கார்’ கொடுக்க நீங்க ரெடியா..மேடையில் நடிகர் கல கல பேச்சு.!
இந்த நிலையில், பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசனிடம் செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சரின் பேச்சு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்து பேசிய அவர், “கூட்டணிக் கணக்குகள் என வருகின்றபோது அவர்களுக்கு இருக்கக்கூடிய பதற்றம் என்பது எதிரணியில் இருக்கக்கூடியவர்கள் எல்லாம் ஒருவேளை ஒன்று சேர்வதற்கு வாய்ப்பு இருந்தால் கணக்கு தப்பாகிப்போய் விடுமோ என்ற எண்ணத்தில் அவர்கள் மற்றவர்களுடைய கணக்கைப் பற்றி அதிகமாக கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
உங்களுடைய பலம், உங்களுக்கு கிடைக்கும் மக்கள் ஆதரவு சரியாக இருந்தால், உங்களுடைய கணக்கெல்லாம் சரியாக இருக்கும். நீங்கள் ஏன் மற்றவர்கள் கணக்கைப் பற்றி யோசிக்கிறீர்கள் என்றால், உங்களால் உங்களுடைய ஆதரவு கணக்கைப் போட முடியவில்லை என்பது தான் யதார்த்தம்” எனத் தெரிவித்தார்.