கேள்வி கேட்டால் வாழைப்பழ காமெடி போல சொன்னதையே திருப்பி திருப்பி அமைச்சர் சொல்கிறார் : வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு!!
Author: Udayachandran RadhaKrishnan2 August 2022, 1:54 pm
சட்டதிருத்தங்களுக்கு உட்பட்டு திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் கொடியை ஏற்றுங்கள் என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
கோவை பாஜக மாவட்ட அலுவலகத்தில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், 75 ஆவது சுதந்திர தினத்தை நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடுவதற்கு பிரதமர் அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார் என்றும் ஆகஸ்ட் 15ஆம் தேதி அனைவரது வீட்டிலும் தேசிய கொடியை ஏற்ற பிரதமர் அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவித்தார்.
மேலும் தேசியக்கொடி ஏற்றுவது போன்றவற்றில் விதிமுறைகளின் படி சட்ட திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும் அதன்படி அனைத்து துணிகளிலும் தேசிய கொடியை தயாரிக்கலாம் மாலை ஆறு மணிக்கு மேலும் தேசிய கொடியை பறக்க விடலாம் என சில சட்டத்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டதாகவும் தேசியக்கொடி ஏற்றும் கொடிக்கம்பங்களின் மேல் எவ்வித சின்னங்களும் இருக்கக் கூடாது எனவும் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டதாகவும் அனைத்து விதிமுறைகளுக்கு உட்பட்டு தேசிய கொடியை ஏற்ற வேண்டும் என தெரிவித்தார்.
மேலும் அரசு இயக்கி வரும் ஜெம் வெப்சைட்டிலும் 2 கோடி தேசியக் கொடிகளுக்கு ஆர்டர் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். கோவை மாவட்டத்திலும் தேசியக்கொடி ஏற்றுவதற்கு பாஜக சார்பில் தனி ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக தெரிவித்த அவர் தெற்கு சட்டமன்ற அலுவலகத்திலும் கொடி விற்பனை செய்ய உள்ளதாகவும் இலவசமாக இல்லாமல் விருப்பமுள்ள பணத்தை செலுத்திக்கொண்டு தேசிய கொடியை பெற்றுக் கொள்ளும்படி ஏற்பாடுகள் செய்யப்படும் தெரிவித்தார்.
அதுமட்டுமின்றி தமிழகத்தில் ஒரு கோடி தேசிய கொடியை ஏற்றுவதற்கு பாஜக சார்பில் ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் ஆண்கள் சார்பில் இரு சக்கர வாகன பேரணியும் பெண்கள் சார்பில் வந்தே மாதரம் பேரணியும் நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.
அட்டுக்கல் பிரச்சனை குறித்து பேசிய அவர் அப்பகுதியில் ஆதரவற்றவர்களுக்காக இல்லம் நடத்துகின்றோம் என்ற பெயரில் நல்ல மனநிலையில் உள்ளவர்களையும் வாகனத்தில் ஏற்றிச்சென்று மொட்டை கடித்து சட்டவிரோதமாக செயல்பட்டு உள்ளதாக கூறிய அவர் பாஜக சார்பில் இது குறித்து விசாரித்த பொழுது அந்த கட்டிடம் சீல் வைக்கப்பட்ட கட்டிடம் என தெரிய வந்ததாகவும் அதனை திறப்பதற்கு திமுக நிர்வாகிகள் ரவி உட்பட சிலர் உதவி இருக்கிறார்கள் எனவும் தெரிவித்தார்.
இதற்கு திமுக அரசு நடவடிக்கை எடுக்குமா என்பதுதான் எங்களின் பயமாக உள்ளதாகவும் தெரிவித்தார். இப்ப பிரச்சனை குறித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்படும் இதுவரை தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என கூறினார். மேலும் மனிதக் கடத்தல் நிறுவனங்களுக்கு மறைமுகமாக திமுக நிர்வாகிகள் உதவுகிறார்கள் எனவும் விமர்சித்தார்.
எனவே அந்நிறுவனத்தினரை கண்டுபிடிக்க வேண்டும் எனவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் அளிக்க வேண்டும் எனவும் இப்பிரச்சினை குறித்து சிபிசிஐடி விசாரணைக்கு முதல்வர் உத்தரவிட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். அரசு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் பாஜக சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் எனவும் தெரிவித்தார்.
கோவை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் “தமிழ்நாட்டில் தலைவரின் ஆட்டம் ஆரம்பம்” என்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது குறித்து கேள்வி எழுப்பியதற்கு அந்த போஸ்டரில் என்ன தப்பு இருக்கிறது? என பதிலளித்தார்.
மேலும் தேசிய கொடியை கோவில்கள் கல்வி நிறுவனங்களிலும் ஏற்றலாம் எனவும் திமுக காங்கிரஸ் ஆகிய அனைத்து கட்சி கொடி கம்பங்களிலும் சட்ட திருத்தங்களுக்கு உட்பட்டு கொடியை ஏற்றலாம் எனவும் தெரிவித்தார்.
ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் குறித்து ஒவ்வொரு முறையும் பேசி வருவதாக தெரிவித்த அவர் கோவை பொறுப்பு அமைச்சர் ஒவ்வொரு முறையும் கோவைக்காக 200 கோடி ரூபாய் உள்ளது என்று கூறுகிறார், அது என்ன ஆனது? கவுண்டமணி செந்தில் வாழைப்பழ காமெடி போல 200 கோடி உள்ளது என தெரிவித்தார்.
கோவை மாநகராட்சியில் மேயர் ஆகியோர் பொறுப்பேற்ற பிறகும் எவ்வித முன்னேற்றமும் இல்லை என தெரிவித்த அவர் திமுகவிற்கு ஏன் வாக்களித்தும் என்று நிலை நிலவி வருவதாக தெரிவித்தார்.
ஸ்மார்ட் சிட்டி திட்டங்களில் குளங்களின் அளவு ஆகியவை குறைக்கப்பட்ட்டுள்ளதாகவும் நீர்வாழ் உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்படும் என சுற்றுசூழல் ஆர்வலர்கள் தெரிவித்து வருவது குறித்த கேள்விக்கு அவ்வாறு பாதிப்பு ஏற்படுமாயின் மத்திய அரசிடமும் இது குறித்து பேசுவதாக பதில் அளித்தார்.