வசூல் பணத்தை பிரிப்பதில் விசிக நிர்வாகிகளுக்கு இடையே தகராறு… கொலை முயற்சியில் ஈடுபட்ட விசிக கவுன்சிலர் உள்பட 3 பேர் கைது..!!

Author: Babu Lakshmanan
19 July 2023, 3:50 pm

சிவகாசியில் சுவர் விளம்பரம் தொடர்பாக சொந்த கட்சி நிர்வாகியை தாக்கியதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கவுன்சிலர் கைது செய்யபட்டு சிறையிலடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகாசி அருகே திருத்தங்கல் பள்ளப்பட்டி ஏ.ஜே. நகரில் வசிப்பவர் தலித் ராஜா (48). இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விருதுநகர் மேற்கு மாவட்ட துணை செயலாளர் பொறுப்பில் உள்ளார். தலித்ராஜா தலைமையிலான கட்சி நிர்வாகிகள் சிலர், திருத்தங்கல் திருவள்ளுவர் காலனியில், மதுரை மாவட்டம் கள்ளிக்குடியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் தனபாண்டியன் என்பவருக்கு சொந்தமான கட்டிட சுவற்றில் அம்பேத்கர் மற்றும் தொல் திருமாவளவன் படங்களை விளம்பரமாக வரைந்து இருந்ததாக கூறப்படுகிறது.

இதனை தனபாண்டியன் அழித்ததாகவும், இதனை சிவகாசி மாநகராட்சி 23வது வார்டு விடுதலை சிறுத்தைகள் கட்சி மாமன்ற உறுப்பினர் அசோக்குமார், அக்கட்சியின் விருதுநகர் பாராளுமன்ற தொகுதி செயலாளர் செல்வா, சிவகாசி சட்டமன்ற தொகுதி செயலாளர் மனிதநேயன், திருத்தங்கல் நகர முற்போக்கு மாணவர் அணி செயலாளர் தங்கராஜ், மற்றும் உறுப்பினர் மோகன் ஆகிய 5 பேரும், ரியல் எஸ்டேட் அதிபர் தனபாண்டியனிடம் தட்டி கேட்டு, பிரச்சனை செய்து ரூபாய் 3 லட்சம் பணம் பெற்றதாக தெரிகிறது.

இது குறித்து ஏற்பட்ட தகராறில் தலித் ராஜாவை மாமன்ற உறுப்பினர் அசோக் குமார் தலைமையிலான விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆபாசமாக திட்டி, கையால் அடித்து உதைத்து, இரும்பு கம்பியால் தலையில் தாக்கியுள்ளனர். இதில், காயமடைந்த தலித் ராஜா சிவகாசி அரசு மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இச்சம்பவம் குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைமையிடம் தகவல் தெரிவித்துள்ள தலித் ராஜா, சிவகாசி கிழக்கு காவல் நிலையத்திலும் புகார் செய்தார். புகாரின் பேரில் கொலை முயற்சி, ஆயுதத்தால் தாக்கியது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த போலீசார் மாநகராட்சி உறுப்பினர் அசோக் குமார், கட்சி நிர்வாகிகள் செல்வா, தங்கராஜ் ஆகிய மூவரையும் கைது செய்து, சிவகாசி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாக நீதிபதிகள் குடியிருப்பில் வசிக்கும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி அமலநாத கமலக்கண்ணன் முன்னிலையில் ஆஜர் படுத்தினர்.

வழக்கை விசாரணை செய்த நீதிபதி மூன்று பேரையும் வருகிற 31ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டதன் பேரில் மூவரையும் போலீசார் இரவோடு இரவாக, அருப்புக்கோட்டை கிளைச் சிறைச் சாலைக்கு கொண்டு சென்று அடைத்தனர். மேலும், தலைமறைவாக உள்ள கட்சி நிர்வாகி மனிதநேயனையும், உறுப்பினர் மோகனையும், போலீஸார்கள் வலை வீசி தேடி வருகின்றனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளுக்குள் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக மாமன்ற உறுப்பினர் உள்பட கட்சி நிர்வாகிகள் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சம்பவம் விருதுநகர் மாவட்டம் முழுவதும் அக்கட்சி நிர்வாகிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

  • Tamannaah Bhatia and Vijay Varma part ways after years of dating காதலரை பிரிந்தார் நடிகை தமன்னா.. இதுக்கும் அவருதான் காரணமா? இன்ஸ்டா பதிவால் பரபர!