அதிமுகவுக்கு அச்சாரம் போடுகிறதா விசிக? ஸ்டாலின் போட்ட முடிச்சு!
Author: Hariharasudhan18 November 2024, 9:50 am
விசிக வேறு கூட்டணியை உருவாக்கத் தேவை இல்லை என மீண்டும் கூட்டணி மாறுதல் தொடர்பான பேச்சுக்கு திருமாவளவன் உறுதி அளித்து உள்ளார்.
சென்னை: “திருமாவளவன் எந்தப் பக்கம் போவார் என்று தமிழகமே காத்திருக்கிறது. அவர் நல்லவர்களோடு இருப்பார், திருமாவளவன் நம்மோடு தான் இருப்பார்” என, நேற்று (நவ.17) சென்னையில் நடைபெற்ற வழக்கறிஞர்கள் மாநாட்டில் அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் இன்பதுரை பேசி இருந்தார்.
இவ்வாறு இவர் பேசிய மேடையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், எம்பியுமான திருமாவளவன் ஆகியோரும் உடன் இருந்தனர். ஏற்கனவே அதிமுக உடனான விசிகவின் இணக்கமான போக்கு திமுகவுக்கு இடையே விரிசலை ஏற்படுத்தியதாக தகவல்கள் கசிந்து வந்தன.
எனவே, இதனைப் போக்க விசிக தலைவர் திருமாவளவன், அந்த மேடையிலேயே, ““மக்களோடு மட்டும் தான் விசிக நிற்கும். இதுதான் நான் இன்பதுரைக்கும் அளிக்கும் பதில். மக்கள் பிரச்னை என்றால், மக்களுக்காக கட்சி அடையாளங்களை க்கடந்து விசிக நிற்கும். தேர்தல் அரசியல் வேறு, மக்களுக்காக போராடுவது வேறு. தேர்தல் அரசியல் என்பது கட்சி நலன் சார்ந்தது. எனவே, காலச் சூழலை கருத்தில் கொண்டு முடிவெடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.
இதுவும் முடிச்சை அவிழ்காமலே, மீண்டும் ஒரு முடிச்சாக அமைய, நிகழ்விற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “விசிக வேறு கூட்டணிக்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை. விசிக, இந்தியா கூட்டணியில் தற்போது இருப்பதால், வேறு கூட்டணியை நாங்கள் உருவாக்கத் தேவையும் இல்லை” எனக் கூறினார்.
இதையும் படிங்க: கங்குவா பட விமர்சனம் திட்டமிட்ட சதி ..ஆவேசம் ஆன ஜோதிகா..!
இவ்வாறு தான் தொடர்ந்து திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியிலே தொடர்வதாக திருமாவளவன் மீண்டும் உறுதி அளித்து உள்ளார். இந்த நிலையில், திமுகவின் ஐடி விங் எக்ஸ் தளப் பக்கத்தில், “அருமைச் சகோதரர் திருமாவளவனின் உள்ளத்தை நான் அறிவேன். மூத்த சகோதரராக என்னிடம் உண்மையான பாசம் காட்டும் திருமாவளாவன் அவர்களும் என் உறுதியான செயல்பாடுகளை அறிவார்” எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
முன்னதாக, விசிக நடத்திய மது ஒழிப்பு மாநாட்டிற்கு அதிமுகவுக்கு அழைப்பு விடுத்தது, ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்பது தொடர்பான வீடியோ வெளியிட்டது மற்றும் தவெக தலைவர் விஜய், அதிகாரத்திலும் பங்கு அளிக்கப்படும் என அழைப்பு விடுத்தது என இன்னும் விசிக கூட்டணி வலையிலே கிடப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.