பீன்ஸ் கிலோ ரூ.100… தக்காளி சொல்லவே வேணாம்… உச்சம் தொட்ட காய்கறிகளின் விலைகள்!!!
Author: Babu Lakshmanan20 May 2022, 10:48 am
கன்னியாகுமரி: குமரி மாவட்டத்தில் மழை காரணமாக பீன்ஸ் மற்றும் தக்காளி வரத்து குறைந்ததால் அவற்றின் விலை கிடு கிடுவென உயர்ந்துள்ளது.
வீடுகள் மற்றும் ஓட்டலில் செய்யப்படும் சமையலில் தக்காளி, வெங்காயம் ஆகியவை முக்கிய பங்கு வகிக்கிறது. அதுபோல் பீன்ஸ், கத்தரிக்காய், வெண்டைக்காய் உள்ளிட்ட காய்கறிகளும் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் குமரி மாவட்டத்தில் தக்காளி, பீன்ஸ் போன்றவற்றின் விலை கடந்த சில நாட்களாக உயர்ந்து வருகிறது. அதிலும் குமரி மாவட்டத்தில் வழக்கமாக ரூ.40 முதல் முதல் ரூ.60 வரை விற்பனை செயப்படும் பீன்ஸ் விலை கிடு கிடுவென உயர்ந்து நேற்று ரூ.100க்கு விற்பனை செய்யப்பட்டது.
அதேசமயம் ரூ.15 முதல் ரூ.25 வரை விற்பனை செய்யப்படும் தக்காளியும் ரூ.75க்கு விற்பனை செய்யப்பட்டது. நாகர்கோவிலில் உள்ள வடசேரி கனகமூலம் சந்தையில் இருந்து மாவட்டத்தின் பல்வேறு சிறு சந்தைகளுக்கு காய்கறிகள் விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகின்றன.
இந்த நிலையில், கனகமூலம் சந்தையில் தக்காளி ரூ.75க்கு விற்கப்படுவதால் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர். தக்காளி மற்றும் பீன்ஸ் விலை ஏற்றம் குறித்து சந்தை வியாபாரி ஒருவரிடம் கேட்டபோது, “வடசேரி கனகமூலம் சந்தைக்கு தினமும் ஒசூரில் இருந்து தக்காளி மற்றும் பீன்ஸ் விற்பனைக்காக கொண்டு வரப்படும். மேலும், காவல்கிணறு மற்றும் குமரி மாவட்டத்தில் சில இடங்களில் இருந்தும் தக்காளி விற்பனைக்காக வருகிறது.
ஆனால், தற்போது மழை பெய்து வருவதால் தக்காளி விளைச்சல் குறைந்துள்ளது. அதேசமயம் பீன்சுக்கு தற்போது சீசன் இல்லை. இதன் காரணமாக தக்காளி மற்றும் பீன்ஸ் ஆகியவற்றின் வரத்து குறைந்ததால் அதன் விலை உயர்ந்து விட்டது. மழை ஓயும் வரை தக்காளி, பீன்ஸ் விலை உயர்ந்தபடியே இருக்கும்,’ என்றார்.
வடசேரி சந்தையில் காய்கறிகளின் நேற்றைய விலை ( ஒரு கிலோ ) நிலவரம் வருமாறு : கத்தரிக்காய் – ரூ .25 , கேரட் – ரூ .60 , முட்டைக்கோஸ் – ரூ .45 , சேனைக்கிழங்கு – ரூ .20 , பீட்ரூட் – ரூ .30 , வெண்டைக்காய் ரூ .30 முதல் ரூ.40 வரை , வெள்ளரிக்காய் – ரூ .40 , இஞ்சி – ரூ .65, முருங்கைக்காய் – ரூ .35, புடலங்காய் – ரூ.20 , தடியங்காய் – ரூ .15 , சுரக்காய் – ரூ .30, பூசணிக்காய் – ரூ .15 , சவ்சவ் – ரூ .25 , முள்ளங்கி – ரூ .25 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.