குப்பைகளால் கண்ணீர் விடும் வெள்ளலூர் சுற்றுவட்டார மக்கள்… கோவை மாநகராட்சியின் புதிய திட்டம் கைகொடுக்குமா..?

Author: Babu Lakshmanan
1 November 2023, 1:23 pm

வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் இருந்து வெளியேறும் துர்நாற்றம் நாளுக்கு நாள் கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளுக்கும் பரவி வருவதால் மக்கள் தூய்மையான காற்றை சுவாசிக்க முடியாமல் திணறும் அவல நிலை உருவாகியுள்ளது.

கோவையில் வெள்ளலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது 650 ஏக்கர் பரப்பளவிலான குப்பைக்கிடங்கு. கோவை மாநகரில் உள்ள 100 வார்டுகளிலும் இருந்து வெள்ளலூர் குப்பைக் கிடங்கிற்கு தினமும் 900 டன் முதல் 1000 டன் வரை குப்பைகள் சேகரித்து அனுப்பப்படுகின்றன.

அவ்வாறு அனுப்பப்படும் குப்பைகள் கிடங்கில் தரம் பிரிக்கப்பட்டு அழிக்கப்படுகின்றன. தினமும் அழிக்கப்படும் அளவை விட, அதிகமான குப்பைகள் குவித்து வருவதால், வெள்ளலூர் சுற்றுவட்டாரப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. பல ஆண்டுகளாக வெள்ளலூர் சுற்றுவட்டாரப்பகுதி மக்கள் இந்த துர்நாற்றத்தில் சொல்லில் அடங்கா துயரத்தை அனுபவித்து வருகின்றனர்.

இதனிடையே, மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரிக்காமல், குப்பைகளை மக்கள் அனுப்புவதால் குப்பைக் கிடங்கில் மீத்தேன் எரிவாயு உருவாகி, வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் அடிக்கடி தீ விபத்தும் ஏற்படுகிறது. அப்போது, அதிக புகை எழுவதால் குழந்தைகளுக்கு சுவாச கோளாறுகள் மற்றும் ஆஸ்துமா உள்ளிட்ட வியாதிகளும் ஏற்படுகின்றன.

இந்த பிரச்சனைக்கு தீர்வு வேண்டும் என்று பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்ற நிலையில், கோவை வெள்ளலூர் குப்பைக் கிடங்கிற்கு கொண்டு வரப்படும் குப்பைகளில் தினமும் 300 டன் குப்பைகள் வரை குறைக்க மாநகராட்சி நிர்வாகம் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதன்படி, மைக்ரோ கம்போஸ்டிங் சென்டர் எனப்படும் நுண்ணுயிர் உரம் உற்பத்தி கூடங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

ஆனாலும், துர்நாற்றம் ஓய்ந்தபாடில்லை. நாளுக்கு நாள் இந்த துர்நாற்றம் அதிகரித்து தற்போது மாநகரின் பல்வேறு பகுதிகளுக்கும் பரவி வருகிறது. அவ்வப்போது குப்பைக்கிடங்கில் இருந்து பல கிலோமீட்டர் தூரங்களுக்கு அப்பால் இருக்கும் சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், ராமநாதபுரம், போத்தனூர் உள்ளிட்ட பகுதிகளிலும் தினமும் மாலை நேரங்களில் துர்நாற்றம் வீசுவதாகவும், சுத்தமான காற்றை சுவாசிக்க முடியவில்லை என்றும், துர்நாற்றத்தால் பாதிப்படைவதாகவும் அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரனிடம் கேள்வியெழுப்பினோம். அதற்கு, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு பிரச்சனை குறித்து மேயர் மற்றும் அதிகாரிகள் தலைமையில் கூட்டம் நடத்தப்பட்டுள்ளதாகவும், கெமிக்கல் ஸ்பிரேக்களை உபயோகப்படுத்தி துர்நாற்றத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், குப்பைகளை விரைவில் தரம் பிரித்து பையோ வேஸ்டுகளை ஒரு வாரத்தில் அப்புறப்படுத்துமாறு ஒப்பந்ததாரர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும், தானே 2 முறை நேரடியாக சென்று ஆய்வு நடத்தியதாகவும் சிவகுரு பிரபாகரன் தெரிவித்தார்.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 412

    0

    0