வெள்ளலூர் குப்பை கிடங்கு விவகாரம்… கோவை மாநகராட்சிக்கு பசுமை தீர்ப்பாயம் குட்டு.. மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திற்கும் போட்ட உத்தரவு

Author: Babu Lakshmanan
20 அக்டோபர் 2023, 8:04 மணி
Quick Share

கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நாளொன்றுக்கு சுமார் 1000 டன் குப்பை சேகரமாகும். இவை அனைத்து வெள்ளலூரில் உள்ள குப்பை கிடங்களில் கொட்டப்படுகிறது. இதனால், நிலத்தடி நீர், காற்று மற்றும் மண் மாசுபாடு அடைவதாகக் கூறி, சென்னையில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில், குறிச்சி – வெள்ளலூர் மாசு தடுப்பு கூட்டுக்குழு செயலாளர் மோகன் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீண்ட காலமாக நடைபெற்று வரும் நிலையில், குப்பைகளை அழிப்பது தொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டும், அந்த நடவடிக்கையை கோவை மாநகராட்சி சுணக்கம் காட்டி வந்துள்ளது.

இந்த நிலையில், இது தொடர்பான வழக்கு கடந்த 16ம் தேதி தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அதிநவீன இயந்திரங்களை பயன்படுத்தி, வெள்ளலூரில் சேகரமாகியிருக்கும் குப்பைகளை உடனே அகற்ற கோவை மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும், கொள்முதல் செய்யப்பட்ட அதிநவீன இயந்திரங்களின் விலையோ அல்லது வாடகைக்கு எடுக்கப்பட்ட தொகை குறித்தோ ஆய்வு செய்யப்படாதது ஏன்..? எனக் கேள்வி எழுப்பப்பட்டது. அதோடு, அதிநவீனம் இல்லாத Trommel இயந்திரங்களை வைத்து குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வரும் கோவை மாநகராட்சி நிர்வாகத்தின் பணிகள் மீது அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், நகராட்சி நிர்வாகத்தின் இயக்குநரிடம் முறையான நிதியை பெற்று, குப்பைகள் அகற்றும் விவகாரத்தில் உரிய தீர்வை காண வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர்.

அதேபோல, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் இந்த விவகாரத்தில், இடைக்கால நிவாரணமாக ரூ.80 லட்சம் அளிப்பதாக கூறிய நிலையில், தற்போது வரை எந்தத் தொகையும் செலுத்தவில்லை என்று அவர்கள் குறிப்பிட்டனர்.

எனவே, இந்த விவகாரத்தின் தன்மையை உணர்ந்து கோவை மாநகராட்சி செயல்பட வேண்டும் என்றும், வெள்ளலூர் குப்பை கிடங்கில் உள்ள குப்பைகளை அகற்றி சீர்படுத்துவது தொடர்பாக உரிய ஆய்வு நடத்தி அறிக்கை அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திற்கும் உத்தரவிடுவதாகவும் தேசிய பசுமை தீர்ப்பாயம் ஆணையிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, இந்த வழக்கு நவம்பர் 30ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

  • Manickam Tagore விஜய்யால் கட்சியின் கூடாரம் காலியாகிறதா? காங்கிரஸ் தலைவர்கள் அடுத்தடுத்து பதில்!
  • Views: - 286

    0

    0