கோடி கணக்கில் நிதி ஒதுக்கீடு செய்தும் வேலை நடக்கமாட்டீங்குது… வேலூர் மாநகராட்சி நிர்வாகம் மீது திமுக கவுன்சிலர்களே குற்றச்சாட்டு
Author: Babu Lakshmanan29 August 2023, 9:36 am
வேலூர் மாநகராட்சியில் கோடி கணக்கில் நிதி ஒதுக்கீடு செய்தும் எந்தப் பணிகள் நடப்பதில்லை என்று திமுக கவுன்சிலர்களே குற்றம்சாட்டியதால் பரபரப்பு நிலவியது.
வேலூர் மாவட்டம் வேலூர் மாநகராட்சியின் கூட்டம் மேயர் சுஜாதா தலைமையில் நடைபெற்றது. இதில் மாநகராட்சி ஆணையர் ரத்தினசாமி உள்ளிட்ட அதிகாரிகளும் கவுன்சிலர்களும் கலந்துகொண்டனர். இந்த மாநகராட்சியில் சாலை பணிகள் சரியாக நடக்கவில்லை, கடும் குடிநீர் தட்டுபாடும் உள்ளது. கோடி கணக்கில் நிதி ஒதுக்கீடு செய்தும் எந்த பணிகளும் நடக்கவில்லை என திமுக கவுன்சிலர்களே குற்றம்சாட்டி பேசினார்கள்.
தொடர்ந்து, பேசிய அவர்கள், எதிர்க்கட்சியினருக்கு பேச வாய்ப்பளிக்கப்படவில்லை. 90 நாட்களுக்கு பிறகு தான் மாமன்றகூட்டம் கூட்டப்பட்டது. எந்த குறையையும் பேச வாய்ப்பளிக்கவில்லை. வார்டுகளில் எந்த பணிகளும் நடக்கவில்லை. ஆனால், மாநகராட்சி கூட்டத்தையும் சரியாக கூட்டி திட்டங்கள் செயல்படுத்துவதில்லை. மாநகராட்சி பகுதிகளில் தெருவிளக்குகள் இல்லை. மக்கள் தேர்வு செய்த கவுன்சிலர்கள் எங்களை தான் கேட்கிறார்கள். பதில் சொல்ல முடியாமல் நாங்கள் தலைமறைவாகிறோம். கோடி கோடியாக ஒதுக்கப்பட்ட பணம் என்ன ஆனாது என சரமாரியாக கேள்வி கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனை படம்பிடித்த செய்தியாளர்களை மேயர் சுஜாதா வெளியேற சொன்னார். இதனால், பத்திரிகையாளர்கள் வெளிநடப்பு செய்தனர்.
பின்னர் சிறிது நேரத்தில் அதிமுக, பாமக, பாஜக கவுன்சிலர்களும் மாமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதுவரையில் தங்கள் வார்டுகளில் எந்த பணிகளும் நடக்கவில்லை. மண்டல அளவிலான கூட்டங்களும் நடத்தப்படவில்லை. தற்போது, மாமன்றத்தில் பேச வாய்ப்பு கேட்டால் வாய்ப்பு அளிக்கவில்லை என மூன்று கட்சியினரும் வெளிநடப்பு செய்தனர்.
நேற்றைய மாநகராட்சி கூட்டத்தில் ஆளுங்கட்சியினரும் காரசாரமாக மேயருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், எதிர்க்கட்சிகளும் வாக்குவாதம் செய்து வெளிநடப்பு செய்ததால் மாமன்றத்தில் பரபரப்பும் பதட்டமும் காணப்பட்டது.