ஆந்திராவில் இருந்து வேலூருக்கு கஞ்சா கடத்தல் ஜரூர்… போலீசாருடன் இரவிலும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட மாவட்ட ஆட்சியர்..!!

Author: Babu Lakshmanan
13 August 2022, 8:46 am

வேலூர் : ஆந்திராவிலிருந்து கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் வேலூர் மாவட்டம் வழியாக கடத்தப்படுவதை தடுக்க, இரவிலும் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மாநில எல்லையில் திடீர் சோதனை நடத்தினர்.

வேலூர் மாவட்டம் வேலூர் ஆந்திர எல்லையில் காட்பாடி அருகேயுள்ள கிறிஸ்டியான் பேட்டை என்ற தமிழக எல்லை சோதனை சாவடியில் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணா ஆகியோர் இரவில் திடீர் என வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

இதில் ஆந்திராவிலிருந்து வரும் ஆந்திர அரசு பேருந்து தமிழக அரசு பேருந்துகள் கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள், லாரிகள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களிலும் சோதனை செய்தனர். மாவட்டத்தில் ஆந்திர எல்லையை ஒட்டியுள்ள பேர்ணாம்பட்டு, பரதமராமி, கிறிஸ்டியான்பேட்டை முத்தரசிகுப்பம்,உள்ளிட்ட ஐந்து இடங்களில் சோதனை சாவடிகளில், தற்போது கஞ்சா மற்றும் போதை பொருட்களை ஆந்திராவிலிருந்து கடத்தி வருவதை தடுக்கும் நோக்கில் தொடர்ந்து வாகன சோதனை நடக்கிறது.

நேற்று தமிழக முதல்வர் அறிவித்ததை தொடர்ந்து, வாகன சோதனை முடுக்கிவிட்டுள்ளதுடன் ரயில்களிலும் சோதனை செய்கின்றனர். மேலும், போதை பொருட்களை விற்பனை செய்து அதன் மூலம் பணம் ஏற்றும் 81 வங்கி கணக்குகள் இம்மாவட்டத்தில் முடக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து சோதனைகளையும், விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் நடத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். பேருந்து நடத்துநர்கள், ஓட்டுநர்களுக்கும் பொருட்கள் எடுத்து வருவதை கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ரயில்வே போலீசாருடன் தமிழக போலீசாரும் சேர்ந்து ஆந்திரா, குஜராத் போன்ற தமிழகம் வரும் ரயில்களை சோதனை செய்து, தொடர்ந்து கஞ்சாவை பிடித்து வருகின்றனர்.

விடுமுறை நாட்களான வெள்ளி சனி,ஞாயிறு திங்கள் ஆகிய 4 நாட்கள் முழுமையான சோதனை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இரவில் மாவட்ட ஆட்சியரும், காவல் கண்காணிப்பாளரும் திடீர் சோதனை நடத்தியது காவல்துறைக்கே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • red card issued to serial actress raveena daha இனி ஒரு வருஷத்துக்கு நடிக்க கூடாது- பிரபல சீரீயல் நடிகைக்கு ரெட் கார்டு? அதிர்ச்சியில் ரசிகர்கள்…