குண்டும் குழியுமான சாலையில் பிரசவத்திற்காக சென்ற கர்ப்பிணி… அலட்சியத்தால் தாயும், சேயும் பலி… மலைகிராமவாசிகள் ஆவேசம்..!!

Author: Babu Lakshmanan
21 July 2022, 5:50 pm

வேலூர் அருகே மலை கிராமத்திற்கு உரிய சாலை வசதி அமைத்து தராததால், பிரசவத்திற்காக அழைத்துச் செல்லப்பட்ட கர்ப்பிணியும், குழந்தையும் உயிரிழந்து விட்டதாக மலை கிராம மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அடுத்த ஜார்தான்கொல்லை ஊராட்சிக்கு உட்பட்ட எலந்தம்புதூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் கோவிந்தன் (50) ஜீவா (45) தம்பதியினர். இவர்களின் மூத்த மகள் காஞ்சனா (22). இந்நிலையில் பீஞ்சமந்தை கிராமத்தைச் சேர்ந்த துரைசாமி மகன் குள்ளையன் (28) என்பவருக்கும், காஞ்சனாவிற்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

தற்போது காஞ்சனா 6 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இதையடுத்து, அதிகாலை 3 மணியளவில் காஞ்சனாவிற்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. ஆனால், கணவன் வெளியூர் சென்றுள்ளதால் உறவினர்களே அவரை பைக்கில் அழைத்து செல்ல முயன்றனர். ஆனால், சரியான சாலை வசதி இல்லாததால் அதிக வலி ஏற்பட்ட சிறிது நேரத்திலேயே காஞ்சனாவிற்கு ஆண் குழந்தை இறந்தே பிறந்துள்ளது. பின்னர் ரத்த போக்கு அதிகமானதால் சிறிது நேரத்திலேயே காஞ்சனாவும் பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவலறிந்த வந்த அணைகட்டு வட்டார மருத்துவ அலுவலர் ஜெயச்சந்திரன் தலைமையிலான அதிகாரிகள் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்ப முயன்ற போது, கிராம மக்கள் ஆட்சியர், தாசில்தார் நேரடியாக வந்து சாலை வசதி ஏற்படுத்தி தருவது குறித்து வாக்குறுதி கொடுத்தால் மட்டுமே சடலத்தை ஒப்படைப்போம் என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக சம்பவ இடத்தில் மருத்துவ துறையினர் மற்றும் வருவாய் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் ; ஜார்தான்கொல்லை ஊராட்சிக்கு உட்பட்ட 15 கிராமங்களில் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் நலனுக்காக பீஞ்சமந்தை மலை பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. ஆனால் சரியான சாலை வசதி இல்லாததால் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.

அதேபோல் , சுகாதார நிலையத்தில் பகலில் மட்டும் டாக்டர்கள், செவிலியர்கள் பணி செய்து வருகின்றனர். இரவு நேரத்தில் யாரும் பணியில் இருப்பதில்லை . இதனால் , இதுபோன்ற உயிரிழப்புகள் அடிக்கடி ஏற்படுகிறது. ஏற்கனவே, ஆட்சியர் இப்பகுதியில் அரசு பணியாளர்கள் தங்கி பணி புரிய வேண்டும் என்று தெரிவித்திருந்தார். ஆனால், கலெக்டரின் உத்தரவு இங்கு காற்றில் பறக்கிறது.

மலை கிராமங்களில் சாலை அமைக்க வனத்துறையினர் முட்டு கட்டை போடுகின்றனர். சாதாரண மண் சாலை அமைப்பதற்கே வனத்துறையினர் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். மலை பகுதிகளில் சாலை அமையாததற்கு முழுக்க முழுக்க வனத்துறையினர் தான் காரணம். இப்பகுதியில் சாலை வசதி இருந்திருந்தால் தாயும், சேயும் காப்பாற்றி இருக்கலாம். எங்களுக்கு தார் சாலை வசதி என்பது எட்டா கனியாகவே இதுவரை இருந்து வருகிறது, இவ்வாறு அவர்கள் கூறினர்.

பீஞ்சமந்தை மலை பகுதியில் தார் சலை அமைக்க அரசு சார்பில் ரூ .5.11 கோடி நிதி ஒதுக்கியது. ஆனால் இதுவரை அதற்கான டெண்டர் விடவில்லையாம். இதனால், சாலை அமைப்பதில் தாமதம் ஏற்படுகின்றது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மலைவாழ் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 1006

    0

    0