மூன்றாவது முறையாக கோவையில் வேலூர் இப்ராஹிம் கைது : பிரச்சாரத்திற்கு சென்ற போது போலீசார் நடவடிக்கை!!
Author: Udayachandran RadhaKrishnan11 February 2022, 1:26 pm
கோவை : கோவையில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ள சென்ற அக்கட்சியின் சிறுபான்மையினர் அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம்-ஐ போலீசார் கைது செய்தனர்.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. பல்வேறு கட்சி வேட்பாளர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தங்களது வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர்கள் முன்னாள் அமைச்சர்கள் வார்டு வாரியாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் போத்தனூர் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் சிறுபான்மையினர் அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் இன்று பிரச்சாரம் மேற்கொள்ள சென்றார்.
அப்போது அவருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி போலீசார் அவரை அங்கிருந்து புறப்பட கூறினர். ஆனால் தான் பிரச்சாரம் மேற்கொள்ள வந்திருப்பதாகவும், இதை தடுக்க கூடாது என்றும் வேலூர் இப்ராஹிம் தெரிவித்தார்.
இந்நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக போலீசார் அவரை கைது செய்தனர்.
இதேபோல் கடந்த இரண்டு முறை வேலூர் இப்ராஹிம் கோவையில் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.