‘தமிழகம் நிமிருகிறது’ என சொன்னது யாரு..? திராவிட மாடலுக்கு ஆளுநர் துணை போக மாட்டார் : வேலூர் இப்ராஹிம் பரபரப்பு பேச்சு..!
Author: Babu Lakshmanan10 January 2023, 4:46 pm
ஆளுநரை இழிவுபடுத்திய திமுகவினரை பாஜக கண்டிப்பதாகவும், திராவிட மாடலுக்கு ஆளுநர் துணை போக மாட்டார் என்று பாஜக சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர்க்கு வருகை தந்த பாஜக தேசிய சிறுபான்மை பிரிவு செயலாளர் வேலூர் இப்ராஹிம் அவர்களை மாநில இளைஞரணி செயலாளர் மருத்துவர் ராம்குமார் தலைமையில் பாஜக நிர்வாகிகள் பட்டாசு வெடித்து சால்வை அணிவித்து வரவேற்றனர்.
இதன் பின்பு அவர் செய்தியாளர்களின் சந்திப்பின்போது கூறியதாவது:- தமிழகத்தில் 2024ல் எதிர் வரும் பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி மிகப்பெரிய அளவிற்கு மக்களின் நம்பிக்கையை பெற்று, இரட்டை இலக்கத்தில் பாராளுமன்றத்திற்கு தமிழகத்தில் இருந்து தாமரையில் வெற்றி பெறக்கூடிய உறுப்பினர்களை அனுப்பவேண்டும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் வழிகாட்டுதலின்படி மிக சிறப்பான முறையில் நாங்கள் செயல்பட்டு வருகிறோம்.
திமுகவினருடைய ஊழலை, அவர்களுடைய அராஜகப் போக்கை, அவர்களுடைய பல்வேறு சட்ட விதி மீறல்களை மக்களுக்கு எடுத்துச் சொல்வதோடு, திமுக அரசு தொடர்ந்து ஊழலை செய்து மக்களை ஏமாற்றக்கூடிய நேரத்தில் இந்த அரசை எதிர்த்து மிகக் கடுமையாக நாங்கள் போராடி வருகிறோம்.
குறிப்பாக சிறுபான்மை மக்களுக்கு ஆதரவு நிலை என்ற திமுகவின் ஒர் பொய் பிரச்சாரம் தவிடுபொடியாயிருக்கிறது.
இன்றைக்கு பிறகு ராமநாதபுரம் மாவட்டத்தில் கீழக்கரை, பெரியப்பட்டினம் போன்ற பல்வேறு பகுதிகளில் இஸ்லாமியர்கள் ஏழைகளாக இருக்கக்கூடியவர்களுக்கு வீடு மற்றும் பள்ளிக்கூடங்கள் அமைக்க ஏற்பாடு செய்திருந்த நிலங்களை திமுகவுடைய பிரமுகர்கள் கொள்ளை அடித்து ஆக்கிரமித்து வைத்திருக்கிறார்கள்.
இதைக் கண்டித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் கொடுத்து, வக்பு நிர்வாகத்திற்கு புகார் கொடுக்கச் சென்றால், காவல்துறை மறுக்கிறார்கள், எங்களை தடுக்கிறார்கள். திமுகவினர் கொள்ளையடிப்பதற்கு காவல்துறை ஒத்துழைக்கிறதா? என்ற கேள்வி எங்களுக்கு எழுகிறது.
தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் இஸ்லாமியர்களுடைய பாதுகாவலன் என்ற வேடம் போடாமல், உண்மையாகவே இஸ்லாமியர்களுடைய வக்பு சொத்தை கொள்ளை அடிக்கும் திமுக பிரமுகர்களின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆதாரப்பூர்வமாக மாவட்ட ஆட்சியரிடத்தில் இராமநாதபுரத்தில் மனு அளித்திருக்கிறோம்.
நேற்றைய சட்டமன்றத்தின் நிகழ்வு என்பது உண்மையாகவே தமிழகத்தினுடைய ஆளுநரை இழிவு படுத்துவதற்காக, திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டதாக, தான் நாங்கள் கருதுகிறோம். ஏனென்றால் தமிழக சட்டமன்றத்தினுடைய மரபுகளுக்கு எதிராக இதுவரை இப்படி எந்த முதல்வரும் ஆளுநரை இழிவுபடுத்தக்கூடிய ஒரு செயலை செய்யக்கூடிய ஒரு விதத்தில் தமிழகத்தில் பார்க்கவே இல்லை.
முதல்முறையாக இப்படிப்பட்ட ஒரு நிலையை எடுத்திருக்கிறார்கள் என்றால், திராவிட மாடல் என்பதை கண்டிப்பாக ஆளுநர் சொல்ல வேண்டும் என நினைப்பார்களேனால், திராவிட மாடல் என்ற திருட்டு மாடலே. ஊழல் மாடலே, அயோக்கித்தனமான மாடலே, இல்லாத திராவிட மாடலை தேடிப் பிடித்து இவர்கள் மீண்டும் பிரச்சாரம் செய்வதற்கு ஆளுநரை பயன்படுத்த நினைத்தால் அதற்கு ஆளுநரும் உதவி செய்ய மாட்டார்.
பாரதிய ஜனதா கட்சியும், திராவிட மாடல் என்ற திருட்டு மாடலை எதிர்க்கும். அது மட்டுமல்லாமல் தமிழகம் என்று சொன்னால் அதை எதிர்ப்பது, தமிழ்நாடு என்று சொன்னால் நாங்கள் ஆதரிப்போம் என்ற இந்த திமுகவின் இரட்டை நிலையை தமிழக மக்கள் வேடிக்கை பார்க்கிறார்கள். பல்வேறு திமுகவினருடைய போஸ்டர்களில் தமிழகம் நிமிருகிறது என போட்டிருக்கிறார்கள்.
தமிழகம் என்பது தான் உங்களின் நிலைப்பாடாக இருக்கும்மென்றால், ஏன்? தமிழ்நாடு என திரும்பவும் சட்டமன்றத்தில் கொக்கரிக்கிறீர்கள். மக்களை குழப்புவதற்காகவும் இவர்களின் ஊழலை வெளிகொண்டுவரக்கூடிய பாஜகவினுடைய தீவிர பிரச்சாரத்தை எதிர்கொள்ள முடியாத கையாலாகாத திமுக அரசும், கொள்ளையடிக்கக்கூடிய இந்த ஆட்சியை வழிநடத்தக்கூடிய ஸ்டாலினை எதிர்த்து போராடும் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகளை காவல்துறை மூலம் அடக்குமுறை செய்து எப்படியாவது இவர்கள் மீண்டும், மீண்டும் ஆட்சிக்கு வர நினைத்தால் பாஜக முட்டுக்கட்டை போடும். 2024ல் திமுகவிற்கு மிகப்பெரிய வீழ்ச்சியை ஏற்படுத்தக்கூடிய வேலையை பாஜக முன்னெடுக்கும், எனக் கூறினார்.