சைக்கிளில் சென்ற ஓய்வுபெற்ற ராணுவ வீரரை தாக்கி செல்போன் பறிப்பு… சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை..!

Author: Babu Lakshmanan
27 August 2022, 11:41 am

வேலூர் அருகே சாலையில் மிதிவண்டியில் சென்ற முதியவரை தாக்கி செல்போன், பணத்தை பறித்துக்கொண்டு தப்பியோடிய நபர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

வேலூர் மாவட்டம் மேல்மொனவூர் அடுத்த ஆவாரம்பாளைம் பகுதியை சேர்ந்த முதியவர், ஓய்வு பெற்ற இராணுவ வீரர் கேப்டன் பூங்காவனம். இவர் நேற்று மாலை தனது மிதிவண்டியில் சேண்பாக்கம் பகுதியில் உள்ள அரசு போக்குவரத்து பணிமனை அருகே சென்று கொண்டிருந்தார்.

அப்போது, திடீரென இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்த அடையாளம் தெரியாத இரண்டு இளைஞர்கள், முதியவரை கீழே தள்ளி தாக்கிவிட்டு, அவரிடம் இருந்து செல்போன் மற்றும் பணத்தை பிடுங்கி கொண்டு தப்பி ஓடியுள்ளனர். இதில் முதியவரின் காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

இதனை கண்ட பொது மக்கள் விரைந்து சென்று முதியவரை மீட்டு 108 ஆம்புலென்ஸ் மூலம் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இது குறித்து தகவல் அறிந்த வேலூர் வடக்கு காவல் துறையினர் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமிராக்களை ஆய்வு செய்து தப்பியோடிய நபர்களை தேடி வருகின்றனர்.

முக்கிய சாலையில் ஓய்வு பெற்ற இராணுவ வீரரை தாக்கி இளைஞர்கள் செல்போன் பறித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • Rashmika Mandanna injured at gym பெரும் சோகத்தில் மூழ்கிய ராஷ்மிகா மந்தனா…சிக்கந்தர் படப்பிடிப்பை நிறுத்திய படக்குழு..!