ரயிலில் சீட் பிடிப்பதில் தகராறு… ஓய்வுபெற்ற ராணுவ வீரர் மீது பிளேடால் தாக்குதல் ; சிறுமிகள் உள்பட வடமாநில பெண்களிடம் விசாரணை..!!
Author: Babu Lakshmanan26 March 2024, 6:20 pm
வேலூர் அருகே ரயிலில் பொதுபெட்டியில் சீட் பிடிக்கும் தகராறில் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் மற்றும் ஒரு வாலிபரை பிளேடு மற்றும் நகங்களால் ரத்த காயம் ஏற்படுத்திய 2 சிறுமி உட்பட மூன்று வடமாநில பெண்களிடம் அரக்கோணம் ரயில்வே போலீசார் விசாரணை நடத்தினர்.
கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து காட்பாடி, அரக்கோணம் வழியாக சென்னை சென்ட்ரலுக்கு லால்பாக் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் இன்ஜினின் முன்பக்கம் உள்ள பொது பெட்டியில் கூட்ட நெரிசல் இருந்தது. இந்நிலையில், சீட்டில் வாலிபர் ஒருவர் படுத்து உறங்கிக் கொண்டிருந்தார். மேலும், துணி மூட்டைகள் ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்தது.
இதற்கிடையே, ரயில் காட்பாடி ஸ்டேஷனில் நின்று புறப்படும் போது, ஓய்வு பெற்ற ராணுவ வீரர் சேகர் (58 ) என்பவர் துணி மூட்டைகளை சீட்டுக்கு கீழே வைக்குமாறும், படுத்திருக்கும் வாலிபரை எழுந்து உட்காருமாறு தெரிவித்துள்ளார்.
மேலும், சில வாலிபர்களும் சீட்டில் உட்காருவதற்கு இடம் கேட்டுள்ளனர். அப்போது, அந்த பெட்டியில் இருந்த மும்பை புனேவை சேர்ந்த சங்கீதா (44), அவரது மகன் சச்சின், மகள்கள் ஜோதி, ஹேமலதா ஆகியோர் பயணிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது ஓய்வு பெற்ற ராணுவ வீரர் சேகரின் காது பகுதியில் ரத்தம் வழிந்தது. இதில் சேகர் தன்னை வட மாநில பெண்கள் பிளேடு மற்றும் நகங்களால் கீரி உள்ளனர் என்று சக பயணிகளிடம் தெரிவித்தார். மேலும், இன்னொரு வாலிபருக்கும் தாடை பகுதியில் காயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் ரயில் பயணிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கிடையே ரயில் சோளிங்கர் அடுத்த மகேந்திரவாடி அருகில் வரும்போது பயணிகள் சிலர் ரயிலின் அபாய சங்கிலியை பிடித்து இழுத்துள்ளனர். பின்னர் ரயில் அங்கிருந்து 4 நிமிட கால தாமதத்தில் புறப்பட்டது.
இது குறித்து ரயில்வே கண்ட்ரோல் ரூமுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அரக்கோணம் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீசார் மற்றும் ஆர்பிஎப் போலீசார் தயாராக நின்றிருந்தனர். அரக்கோணத்தில் ரயில் வந்து நின்றதும் போலீசார் விசாரணை நடத்தி ஒரு பெண், இரண்டு சிறுமி மற்றும் சச்சின் என்ற வாலிபரை கீழே இறக்கினர். மேலும், பாதிக்கப்பட்ட 2 வாலிபர்களையும் போலீசார் கீழே இறக்கி விசாரித்தனர்.
இந்நிலையில் புனேவை சேர்ந்த சச்சின், போலீஸ் விசாரணையின் போது திடீரென அங்கிருந்து காணாமல் போனார். இதன் காரணமாக ரயில் அரக்கோணத்தில் 15 நிமிடங்கள் காலதாமதமாக புறப்பட்டது. இதைத்தொடர்ந்து, அரக்கோணம் ரயில்வே போலீசார் புனேவைச் சேர்ந்த சங்கீதா, அவரது மகள்கள் ஜோதி, ஹேமலதா ஆகியோரை ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரித்தனர். அவர்கள் சென்னையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடக்கிறது.
அங்கு பனியன்கள் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்வதற்காக துணி மூட்டைகள் எடுத்து செல்கிறோம். அந்த மூட்டைகள் சீட்டுக்கு கீழே வைத்திருந்த போது தகராறு ஏற்பட்டது. நாங்கள் பிளேடால் கிழிக்கவில்லை. கை நகங்களால் சண்டை போடும்போது கிழித்திருக்கலாம் என்று தெரிவித்தனர். இதை தொடர்ந்து போலீசார் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் சேகரிடம் புகார் மனு பெற்று தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அரக்கோணம் ரயில் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.