எங்ககிட்ட சொல்லலையே.. கைவிரித்த வேல்முருகன்.. மதுக்கடைகள் மூடல் அப்போ?

Author: Hariharasudhan
23 அக்டோபர் 2024, 12:10 மணி
Velmurugan
Quick Share

மதுக்கடைகள் மூடுவது தொடர்பாக எந்தவிதமான உறுதிமொழியும் உறுதிமொழிக் குழுவிடம் இல்லை என வேல்முருகன் கூறியுள்ளார்.

புதுக்கோட்டை: தமிழ்நாடு சட்டமன்ற உறுதிக் குழு தலைவர் வேல்முருகன் தலைமையிலான ஆறு பேர் கொண்ட குழு, புதுக்கோட்டை மாவட்டத்தில் சட்டமன்றத்தில் உறுதி அளித்த திட்டங்கள் மாவட்டத்தில் எந்த அளவு நடைபெற்றுள்ளது என்பது குறித்து காலையில் கள ஆய்வு மேற்கொண்டனர். இதன்படி, அறந்தாங்கி அரசு மருத்துவமனை, புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ஆதிதிராவிடர் மாணவியர் விடுதி, பிற்படுத்தப்பட்டோர் மாணவிகள் விடுதி ஆகியவற்றில் ஆய்வு செய்தனர்.

இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அருணா முன்னிலையில், அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்ட ஆய்வுக் கூட்டத்தை இக்குழு நடத்தியது. இதில் மாவட்டத்தில் சட்டமன்றத்தில் உறுதி அளித்த திட்டங்களின் நிலை, அது எவ்வாறு நடைபெற்று வருகிறது, நிதி முறையாக பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பது குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.

இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த வேல்முருகன், “புதுக்கோட்டை மாவட்டத்தில் சட்டமன்ற உறுதிக் குழுவிடம் நிலுவையில் இருந்த உறுதிமொழிகள் 42. இதில் 27 உறுதிமொழிகள் நிறைவேற்றப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது, 15 உறுதிமொழிகள் நிலுவையில் உள்ளன. இந்த ஆண்டு 296 உறுதிமொழிகள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

152 உறுதிமொழிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. படித்து பதிவு செய்யப்பட்டபோது 14 உறுதிமொழிகள் மீதமுள்ள 130 உறுதிமொழிகள் சரி பாதிக்கு மேலாக பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதர மாவட்டங்களை விட புதுக்கோட்டை மாவட்டம் பின் தங்கிய மாவட்டம், இன்னும் வளர்ச்சி அடைய வேண்டியுள்ளது. அரசு என்ன நோக்கத்திற்காக மக்களுக்கான திட்டத்தை அறிவிக்கிறதோ, அதனை அதிகாரிகள் நடைமுறைபடுத்த வேண்டும். அதனை கண்காணித்து நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது தான் சட்டப்பேரவை உறுதிமொழி குழுவிற்கான பணி.

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் கழிவுநீர் பிரச்னைக்கு தீர்வு காண, சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்து, ரூ.4 கோடி மதிப்பில் கழிவு நீரை சுத்திகரித்து அப்புறப்படுத்தும் துறை அதிகாரிகளிடம் பேசி உடனடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம். காவிரி – குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கும் புதுக்கோட்டை மாவட்டத்தின் குடிநீர் பிரச்னைக்கும் நிதி ஒதுக்கீடு செய்ய நீர் வளத்துறை செயலாளரிடம் பேசி நடவடிக்கை எடுப்போம்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கல்குவாரிகளை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குழுவிற்கு மனு வந்துள்ளது. இது குறித்து கனிம வளத்துறை உதவி இயக்குனர் ஆய்வு செய்து அறிக்கை பாரபட்சம் என்று தயாரித்து, மாவட்ட ஆட்சியர் மூலமாக குழுவிற்கு அனுப்ப வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அதன் பிறகு அறிக்கை பெற்றவுடன் கனிம வளத்துறை இயக்குனரைச் சந்தித்து நாங்கள் குவாரிகள் தொடர்பாக நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்வோம்.

மூடப்பட்ட குவாரிகளின் பாறைகளில் தங்கியுள்ள நீரினால், சிறுவர்கள் குளிக்கும் போது பல்வேறு உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இதுகுறித்து குழு ஏதாவது பரிசீலனை செய்துள்ளதா என்று கேள்வி கேட்டபோது, இது தொடர்பாக எந்தவித மனுவும் குழுவிடம் இல்லை. இருப்பினும் உயிரிழப்புகள் ஏற்பட்டால் மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுக்க குழு அவரிடம் எடுத்துக் கூறும்.

இதையும் படிங்க: ரூ.27 கோடி லஞ்சமா? ஓபிஎஸ் அணி நிர்வாகி இடங்களில் ED சோதனை!

தமிழகத்தில் 47 ஆயிரம் குளம், ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகள் உள்ளன. ஆனால் தற்போது 37 ஆயிரம் தான் உள்ளது. அரசு இதர பயன்பாட்டிற்கு நீர்நிலைகள் இடத்தை எடுத்துள்ளது. தமிழக அரசு நீர்நிலைகள் பாதுகாப்பதில் கவனம் செலுத்த வேண்டும். மதுக்கடைகள் மூடுவது குறித்து சட்டமன்றத்தில் முதல்வர் எந்த விதமான உறுதிமொழியும் கொடுக்கவில்லை. அதனால் குழுவிற்கு அது தொடர்பான மனு இல்லை. இது தொடர்பாக சட்டமன்றத்தில் முதல்வர் படிப்படியாக மதுக்கடைகள் மூடப்படும் என்று அறிவித்தால், எத்தனை கடைகள் மூடப்பட்டுள்ளது என்பது குறித்து ஆய்வு செய்யும்.

மதுக்கடைகள் மூடுவது தொடர்பாக எந்தவிதமான உறுதிமொழியும் உறுதிமொழிக் குழுவிடம் இல்லை. மதுக் கொள்கையில் தனிப்பட்ட நபராக எனக்கு ஒரு கொள்கை உள்ளது. ஆனால் தற்போது நான் அரசு பிரதிநிதியாக வந்துள்ளேன். எனவே, அரசு என்ன உறுதிமொழி கொடுத்துள்ளதோ, அது குறித்து மட்டுமே தற்போது என்னால் பேச முடியும். சட்டமன்ற உறுதிக் குழு ஆய்வின் போது பல துறைகளில் நிதி முறையாக பயன்படுத்தவில்லை என்று தெரியவந்துள்ளது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நாங்கள் அறிவுறுத்தி உள்ளோம்” என்றார்.

  • Heavy Rain கோவைக்கு அடுத்த 2 நாட்களுக்கு சம்பவம் இருக்கு.. வானிலை மையம் எச்சரிக்கை!
  • Views: - 105

    0

    0

    மறுமொழி இடவும்