திமுக தலைமை என்ன முடிவெடுத்தாலும்.. கூட்டணி முடிவு? வேல்முருகன் திடுக் பேச்சு!
Author: Hariharasudhan24 March 2025, 12:07 pm
தமிழக வாழ்வுரிமை கட்சி, இந்த நிமிடம் வரை திமுக கூட்டணியில் தான் உள்ளது என அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
மதுரை: நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளராக இருந்த வெற்றிக்குமரன், கட்சியில் இருந்து விலகிய நிலையில், மதுரையில் நேற்று மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் இணைந்தார். இதனையடுத்து, அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “தமிழக வாழ்வுரிமை கட்சி, இந்த நிமிடம் வரை திமுக கூட்டணியில் தான் உள்ளது. வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் அப்போது உள்ள சூழ்நிலையைப் பொறுத்து, கட்சி நிர்வாகிகளுடன் பேசி முடிவு எடுக்கப்படும். நான் சட்டப்பேரவையில் எடுத்து முன்வைக்கின்ற, தமிழர் உரிமை, தமிழ் மண் சார்ந்த கோரிக்கை குறித்து, திமுக தலைமைக்கு சங்கடம் ஏற்பட்டிருந்தால், திமுக தலைமை என்ன முடிவெடுத்தாலும் ஏற்றுக் கொள்வோம்.
எனவே, சட்டப்பேரவையில் எனது தமிழ் மண், தமிழர் உரிமை தொடர்பான கோரிக்கை பேச்சு தொடரும். நான் தற்போது மட்டுமில்லை, பல ஆண்டுகளாக. சட்டப்பேரவையில் பல கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசியுள்ளேன். தமிழ், தமிழ் மண், முல்லைப் பெரியாறு அணை, மேகதாது உள்ளிட்ட பல பிரச்னைகள் குறித்து சட்டப்பேரவையில் பேசி, பல சட்டங்கள் கொண்டு வரவும் காரணமாக இருந்துள்ளேன்.

மருதமலைக் கோயிலில் குடமுழுக்கு தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என ஏற்கனவே கவன ஈர்ப்பு தீர்மானம் கோரி சட்டப்பேரவையில் மனு கொடுத்துள்ளேன். அமைச்சர் சேகர்பாபுவிடமும் இது சம்பந்தமாக வலியுறுத்தியுள்ளேன். ஆனால், சட்டப்பேரவையில் திமுக அமைச்சர் சேகர் பாபு, அதிமுக உதயகுமார் உள்ளிட்ட எம்எல்ஏக்கள் கடந்த சில நாட்களுக்கு முன் என்னைப் பேச விடாமல் தடுத்தனர்” என்றார்.
இதையும் படிங்க: சுரேஷுக்காக சுந்தரி போட்ட ப்ளான்.. கள்ளத்தொடர்புக்கு இடையூறு செய்த கள்ள உறவு.. என்ன நடந்தது?
முன்னதாக, தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற விவாதத்தின்போது வேல்முருகன் – சபாநாயகர் அப்பாவு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இடையே காரசாரமான வாதம் பறந்தது. அப்போது, அதிகப்பிரசங்கித்தனம் என ஸ்டாலின் வேல்முருகனை விமர்சித்தது கூட்டணியில் கவனம் பெற்றது.