பெட்டிக்கடையாக மாறிய சொந்தவீடு.. மருத்துவ செலவுக்கு கூட பணமில்ல… வெண்ணிலா கபடிக்குழு பட நடிகரின் பரிதாப நிலை!!

Author: Babu Lakshmanan
31 May 2022, 4:55 pm

கடந்த 2009ம் ஆண்டு சுசீந்திரன் இயக்கத்தில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த படம் வெண்ணிலா கபடிக் குழு. இந்தப் படம்தான் நடிகர் விஷ்ணு விஷால், நகைச்சுவை நடிகர் சூரி உள்ளிட்டோருக்கு திருப்புமுனை வாய்ந்த படமாக அமைந்தது.

மேலும், இந்தப் படத்தில், அப்புகுட்டி, பரோட்டா முரளி, விஜய் சேதுபதி, சரண்யா மோகன் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தனர். இந்தப் படத்தின் மூலம் மக்களிடத்தில் அறிமுகமானவர் நடிகர் ஹரி வைரவன். இவர் இந்த படத்தை தொடர்ந்து குள்ளநரி கூட்டம் போன்ற சில படங்களில் நடித்திருக்கிறார். அதற்குப்பிறகு இவர் என்ன ஆனார்? என்றே தெரியவில்லை.

இந்த நிலையில், தற்போது அவரைப் பற்றிய சோகமான கதை வெளியுலகிற்கு தெரிய வந்துள்ளது. பிரபல யூடியூப் சேனல் ஒன்று நடிகர் ஹரி வைரவனின் நிலை குறித்து அவரது குடும்பத்தினரிடம் பேட்டி எடுத்தது. அது ரசிகர்களிடையே மிகுந்த சோகத்தையும், கண்களில் தண்ணீர் வைக்கும் விதமாகவும் அமைந்துள்ளது.

அந்தப் பேட்டியில் ஹரி வைரவனின் மனைவி கூறியதாவது :- வெண்ணிலா கபடி குழு, குள்ளநரி கூட்டம் உள்ளிட்ட படங்களில் என் கணவர் நடித்துள்ளார். எங்களுக்கு இருவீட்டார் ஏற்பாடு செய்துதான் திருமணம் நடந்தது. ஆரம்பத்தில் எங்களின் வாழ்க்கை நன்றாக தான் இருந்தது. எனது கணவர் என்னை நன்றாக பார்த்துக் கொண்டார். இந்த சூழலில், அவருக்கு திடீரென ஒருநாள் உடல்நிலை சரியில்லாமல் போனது. மூச்சு பேச்சு இல்லாமல் ஆகிவிட்டார். சிலர் இறந்துவிட்டார் என்று கூட சொன்னார்கள்.

ஆனால், நம்பிக்கையை விடாமல் அவரை மருத்துவமனையில் சேர்த்தேன். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், எனது கணவர் கோமாவில் இருப்பதாக கூறினார்கள். எனக்கு என்ன பண்ணுவது என்றே புரியவில்லை? பின் நான் அவர் அருகில் உட்கார்ந்து தினமும் நடக்கும் நிகழ்ச்சிகளையும், பழைய நிகழ்ச்சிகளையும் அவரிடம் பேசிக் கொண்டே இருப்பேன். 15 நாட்களுக்கு பிறகு மெல்ல மெல்ல சுயநினைவு திரும்பியது. அவருக்கு சர்க்கரை வியாதி இருந்ததால், அவர் கை,கால் நடக்க முடியாமல் போனது. பலரும் அவர் பிழைப்பது கஷ்டம் என்று சொன்னார்கள்.

பயங்கர உடல் எடை போட்டதால் மருத்துவர்கள் சொன்னது போன்ற நடைபயிற்சி கூட மேற்கொள்ள முடியவில்லை. என்னால் தனியாக சமாளிக்க முடியவில்லை. பின் மருத்துவர்கள் உதவியுடன் அவரை கொஞ்சம் கொஞ்சமாக நடக்க வைக்க முயற்சி செய்தோம். தற்போது அவர் கொஞ்சம் நன்றாக நடக்கிறார்,பேசுகிறார்.

பிளாக் பாண்டி அண்ணா, கார்த்திக் அண்ணா,சரவணா அண்ணா போன்ற என் கணவருடன் பணிபுரிந்த நண்பர்கள் சிலர் உதவி செய்தனர். அவரை நடக்க வைக்க 10 நாட்களுக்கு 8000 ரூபாய் என்ற மருத்துவ செலவு ஆகிறது. நாங்கள் இருந்த சொந்த வீட்டை விற்று தான் இவருடைய கடனையும் மருத்துவ செலவையும் பார்த்துக்கொண்டிருந்தேன். தற்போது ஒரு பெட்டிக்கடை வைத்து இருக்கிறேன். அதில் வரும் வருமானத்தை வைத்து தான் குடும்ப செலவையும், அவருக்கு மருத்துவச் செலவையும் பார்த்து வருகிறேன்.

இன்னும் 6 மாதம் மருத்துவம் செய்தால் என் கணவர் முழுமையாக குணம் அடைவர் என்ற நம்பிக்கை இருக்கிறது. என் கணவர் என்னுடன் இருந்தால் மட்டும் போதும். அதற்காக தான் நான் போராடினேன். என் கணவரை பார்த்துக்கொள்ள எனக்கு தெம்பு இருக்கிறது, என்று கண் கலங்கியபடி அவர் கூறினார்.

ஹரி வைரவனுடன் நடித்த பல நடிகர்கள் திரையுலகில் உச்சத்திற்கு சென்றிருந்தாலும், அவர்கள் மட்டுமின்றி மனிதாபிமானம் மிக்க நடிகர்கள் ஆதரவுரக்கரம் நீட்டினால், ஹரி வைரவனின் கால் மண்ணில் பட வைத்து விடலாம் என்பதே நிதர்சனமான உண்மை.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 919

    3

    0