காலி இடத்திற்கு வரி நிர்ணயமா..? ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பில் கலெக்டர் கைது ; லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி…!!

Author: Babu Lakshmanan
25 August 2023, 5:07 pm

திருச்சியில் வரி நிர்ணயம் செய்ய ரூபாய் 5000 லஞ்சம் வாங்கிய பில் கலெக்டரை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்தனர்.

திருச்சி தீரன் நகரை சேர்ந்தவர் பெரியசாமி மகன் நாகராஜன் (64). இவர் மத்திய ரயில்வே பாதுகாப்புப் படையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது தாயார் பெயரில் திருச்சி சுப்பிரமணியபுரத்தில் 1600 சதுர அடியில் காலி மனை ஒன்று இருந்துள்ளது.

அந்த காலி மனையில் வீடு கட்ட எண்ணிய நாகராஜன், கடந்த 14.8.2023 அன்று தனது காலி மனைக்கு வரி நிர்ணயம் செய்ய வேண்டுவதற்காக திருச்சி சுப்பிரமணியபுரத்தில் அமைந்துள்ள திருச்சி மாநகராட்சியின் 48வது வார்டு வரி வசூல் மையத்திற்கு சென்று அங்கிருந்த பில் கலெக்டர் ராஜலிங்கம் (வயது 54) என்பவரை சந்தித்து வரி செலுத்த விவரம் கேட்டுள்ளார்.

பில் கலெக்டர் ராஜலிங்கம் நாகராஜனிடம் காலி மனை வரிவிதிப்பு தொடர்பான விண்ணப்பத்தினை கொடுத்து ஆவணங்களை இணைத்து விண்ணப்பத்தை பூர்த்தி செய்து மீண்டும் வந்து தன்னை சந்திக்குமாறு கூறியுள்ளார். அதன் பேரில், நாகராஜன் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து கடந்த 23.8.2023 அன்று சுப்பிரமணியபுரத்தில் உள்ள வரிவசூல் மையத்திற்கு சென்று பில் கலெக்டர் ராஜலிங்கத்தை சந்தித்து காலி மனை வரிவிதிப்பு தொடர்பான விண்ணப்பத்தினை கொடுத்துள்ளார்.

விண்ணப்பத்தினை பெற்றுக் கொண்ட பில் கலெக்டர் ராஜலிங்கம் நாகராஜனின் காலி மனைக்கு வரி விதிப்பு நிர்ணயம் செய்து கொடுக்க, தனக்கு 7000 லஞ்சமாக கொடுக்க வேண்டும் என்று கேட்டுள்ளார். பின் நாகராஜன் கேட்டுக் கொண்டதன் பேரில், பில் கலெக்டர் ராஜலிங்கம் 2000 ரூபாய் குறைத்துக் கொண்டு, 5000 கொடுத்தால் மட்டுமே, உங்களது காலி மனைக்கு வரி நிர்ணயம் செய்து கொடுக்க முடியும் என்று கட்டாயமாக கூறியுள்ளார்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத நாகராஜன், திருச்சி லஞ்ச ஒழிப்புத் துறையில் அளித்த புகாரின் பேரில், டிஎஸ்பி மணிகண்டன் தலைமையிலான லஞ்ச ஒழிப்புத்துறையினரின் ஆலோசனையின் பேரில், நாகராஜனிடம் 5000 ரூபாய் லஞ்சப்பணத்தை இன்று மதியம் சுமார் 12 மணியளவில் சுப்பிரமணியபுரத்தில் உள்ள வரி வசூல் மையத்தில் வைத்து பில் கலெக்டர் ராஜலிங்கத்திடம் கொடுத்துள்ளார்.

அந்தப் பணத்தை வாங்கியபோது லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கையும் களவுமாக கைது செய்யப்பட்டார். மேலும், பில் கலெக்டர் ராஜலிங்கத்தின் இரு சக்கர வாகனத்தை சோதனை செய்த போது, அதில் இருந்த கணக்கில் வராத 25 ஆயிரம் ரூபாயும் கைப்பற்றப்பட்டது.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 388

    0

    0