பற்களை பிடுங்கிய விவகாரம்… ஏ.எஸ்.பி.க்கு ஆதரவாக பொதுமக்கள் ஒட்டிய பேனர்… கோவில்களிலும் போட்டோவை வைத்து சிறப்பு பூஜை..!!

Author: Babu Lakshmanan
1 April 2023, 9:33 am

நெல்லை : அம்பாசமுத்திரம் அருகே கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஏஎஸ்பி பல்வர் சிங்கிற்கு ஆதரவாக பொதுமக்கள் பேனர் வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் விசாரணைக்கு அழைத்து சென்றவர்கள் பற்களை பிடுங்கிய விவகாரம் தொடர்பாக அம்பை ஏ.எஸ்.பி.யாக இருந்த பல்வீர் சிங் அதிரடியாக காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டு சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

இந்த நிலையில் நெல்லை மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்படி சேரன்மாதேவி சார் ஆட்சியர் தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் சிலர் மனித உரிமைகள் ஆணையத்தில் ஆஜரான நிலையில், அம்பை ஏ.எஸ்.பி.யாக இருந்த பல்வீர் சிங்கிற்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஏ.எஸ்.பி.க்கு ஆதரவாக சில வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், பாப்பாக்குடி அருகேயுள்ள ஓடைக்கரை துலுக்கப்பட்டியில், சுமார் 10 அடியில் ஏ.எஸ்.பி. படம் பொறித்த டிஜிட்டல் பேனரில், தமிழக முதல்வருக்கு பணிவான வேண்டுகோள் என்றும், பல்வீர் சிங் அவர்களை மீண்டும் பணியில் அமர்த்தி பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுகிறோம். ஊர் பொதுமக்கள் – ஓடைக்கரை, துலுக்கப்பட்டி என்ற வசனத்துடன் வைத்துள்ளனர். தற்போது இந்த டிஜிட்டல் பேனர் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மேலும், அப்பகுதியிலுள்ள முப்புடாதி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்தனர். தொடர்ந்து, மீண்டும் பணியில் அமர அம்மன் பாதத்தில் ஏ.எஸ்.பி.யின் படத்தை வைத்து எடுத்தனர்.

இதுகுறித்து அப்பகுதியினர், எங்கள் பகுதியில் கோவில் கொடை விழாவிற்கு வந்து பாதுகாப்பு அளித்தார், சி.சி.டி.வி. கேமாராக்கள் வைக்க நடவடிக்கை மேற்கொண்டார். எளிமையாக பேசினார், இதனால் சிறப்பு பூஜைகள் செய்ததாக தெரிவி்த்தனர்.

  • Tamannaah Bhatia and Vijay Varma part ways after years of dating காதலரை பிரிந்தார் நடிகை தமன்னா.. இதுக்கும் அவருதான் காரணமா? இன்ஸ்டா பதிவால் பரபர!