வாரிசு ஷூட்டிங் ஸ்பாட்டில் போலீஸ் தடியடி… எங்களுக்கே இந்த நிலையா? விரட்டியடிக்கப்பட்ட விஜய் ரசிகர்கள் குமுறல்..!
Author: Vignesh26 September 2022, 6:32 pm
நடிகர் விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான பீஸ்ட் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாததால், அடுத்த படத்தில் எப்படியாவது ஹிட் கொடுக்க வேண்டும் என்கிற முனைப்புடன் பணியாற்றி வருகிறார் விஜய். அவர் நடிப்பில் தற்போது வாரிசு திரைப்படம் உருவாகி வருகிறது. பிரபல தெலுங்கு இயக்குனரும், தமிழில் தோழா படத்தை இயக்கியவருமான வம்சி பைடிப்பள்ளி தான் இப்படத்தை இயக்குகிறார்.
வாரிசு படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தானா நடித்து வருகிறார். இவர்கள் இருவரும் ஜோடியாக நடிப்பது இதுவே முதன்முறையாகும். இதேபோல் பிரபு, பிரகாஷ் ராஜ், ஷியாம், சரத்குமார், சம்யுக்தா, குஷ்பு, யோகிபாபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்து வருகிறது. தில் ராஜு தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.
வாரிசு படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களும், வீடியோக்களும் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில், வாரிசு படப்பிடிப்பில் விஜய்யை பார்க்க அனுமதிக்காததால் ரசிகர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சென்னை எண்ணூரில் படப்பிடிப்பு நடைபெற்ற நிலையில், விஜய் கலந்துக்கொண்டதாக தகவல் வெளியானதால், ஏராளமான ரசிகர்கள் அங்கு குவிந்தனர். விஜய்யை பார்க்க முற்பட்டபோது போலீசார் தடியடி நடத்தி விரட்டியடித்ததாக ரசிகர்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.
இதனால் ஆத்திரமடைந்த விஜய் ரசிகர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். படங்கள் வெளியாகும் போது பேனர் வைத்து உயிரையே விட்ட ரசிகர்களைப் பார்த்து விஜய் கை கூட அசைக்கவில்லை என்றும் அவர்கள் குமுறி வருகின்றனர். அதில் சிலர் ரசிகர்மன்ற நிர்வாகியான தங்களை உள்ளே அனுமதிக்காவிட்டால் போராட்டம் நடக்கும் எனவும் எச்சரித்துளனர். மேலும், ரஜினி, சூர்யா உட்பட மற்ற நடிகர்கள் இங்கு படப்பிடிப்புக்கு வந்தால் ரசிகர்களை உள்ளே அனுமதிப்பதாகவும், விஜய் மட்டும் தங்களை உள்ளே விடவில்லை எனவும் கூறியுள்ளனர்.
விஜய் ரசிகர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் குறித்து வாரிசு படக்குழு தரப்பில் இருந்து இதுவரை எந்த விளக்கமும் கொடுக்கப்படவில்லை. அதேநேரம், படப்பிடிப்புத் தளங்களில் பாதுகாப்பிற்காக ரசிகர்கள் செல்ல வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது என்ற கேள்வியும் எழுகிறது. உச்ச நட்சத்திரங்கள் நடிக்கும் படங்களின் ஷூட்டிங் ஸ்பாட்டில் இப்போதெல்லாம் பாதுகாப்பு பணிகளுக்காக பவுன்சர்கள் வருகின்றனர். அவர்களையும் மீறி தேவையென்றால் போலீஸார் பாதுகாப்பு கொடுக்கின்றனர். இப்படி இருக்கும் போது ரசிகர் மன்ற நிர்வாகியின் பேச்சைக் கேட்டுவிட்டு ரசிகர்கள் அங்கு செல்வதும், இப்படி தடியடி நடப்பதும் தேவையில்லாதது என்றே சினிமா ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.